சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பயனில்லாத பத்து வருடங்கள்.. அந்தப் படத்தின் மூலம் வேற லெவலுக்கு சென்ற ராதிகா

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை ராதிகா சரத்குமார். சினிமாவில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்விலும் ஒரு தைரியமான பெண்மணியாக இவர் வலம் வருகிறார்.

தற்போது சினிமா, சீரியல், தயாரிப்பு என்று கவனம் செலுத்தி வரும் ராதிகா முதன்முதலில் பாரதிராஜாவின் இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படத்தில் பாஞ்சாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அவையெல்லாம் அவருடைய முதல் படம் அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. இதனால் சோர்ந்து போயிருந்த ராதிகாவிற்கு திருப்புமுனையை கொடுத்த படம்தான் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இன்று போய் நாளை வா திரைப்படம்.

இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. அதன்பிறகு ராதிகா போக்கிரி ராஜா, மெட்டி, ரங்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் மிகவும் துணிச்சலான பெண்ணாக நடித்திருப்பார். அது அவருக்கு மிகவும் பொருத்தமாகவே இருந்தது.

ஒருமுறை ராதிகாவுக்கு குழந்தை பிறந்திருந்த சமயத்தில் இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவர் ராதிகாவிடம், நான் கிழக்குச் சீமையிலே என்று ஒரு படம் இயக்குகிறேன். அந்த படத்தில் நீ தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் வார்த்தையை மறுக்கமுடியாத ராதிகா மூன்று மாத கைக்குழந்தையுடன் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அந்தப் படத்தில் நடிகை ராதிகாவின் நடிப்பு இன்றும் கூட அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் அண்ணன், தங்கை படம் என்றாலே கிழக்குசீமை என்று சொல்லும் அளவுக்கு அப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து ராதிகா இன்றுவரை பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடிக்க ஆரம்பித்த வருடத்திலிருந்து இன்று வரை அனைத்து தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுதவிர சின்னத்திரையில் அவர் முதன்முதலாக நடித்த சித்தி சீரியல் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்பை பெற்ற ராதிகா இன்றும் தமிழ் சினிமாவில் தன்னுடைய கெத்து குறையாமல் நடித்து வருகிறார்.

Trending News