ரசிகர்கள் ஆதரவோடு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.
செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. அல்லு அர்ஜுன் படங்களுக்கு இதுவரை இவ்வளவு வரவேற்பும், வசூலும் கிடைத்ததில்லை. அந்த அளவுக்கு படம் வசூலில் சக்கை போடு போடுகிறது.
கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் இதுவரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் தியேட்டரில் 100% இருக்கைக்கு அனுமதி கிடைத்தாலும், வட இந்திய மாநிலங்களில் இன்னும் பல இடங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கிற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
அப்படி இருந்தும் புஷ்பா திரைப்படம் இவ்வளவு கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வெறும் மூன்று நாட்களில் சுமார் 173 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வார இறுதி நாட்களில் மட்டும் புஷ்பா திரைப்படம் 12 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்த ஆண்டு வெளியாகி அதிக வசூலை பெற்ற திரைப்படங்களில் புஷ்பா திரைப்படம் நிச்சயம் இடம் பிடிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மாஸ்டர், அண்ணாத்த, மாநாடு போன்ற திரைப்படங்கள் 100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் புஷ்பா திரைப்படம் இந்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் வசூலையும் தாண்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. படத்தின் வெற்றிக்கு கதை, நடிப்பு போன்றவை சொல்லப்பட்டாலும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சமந்தாவின் கவர்ச்சி நடனமும் ஒரு முக்கிய காரணமாகும்.
