செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்க இதுதான் காரணமா?. முடிவுக்கு வருகிறதா CMBT-யின் சகாப்தம்

Kilambakkam Bus Terminus: கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும் அதி நவீன பேருந்து நிலையம் கடந்த 30ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு போக, மாநிலங்களுக்கு போக ஒரு அதிநவீன பேருந்து நிலையம் புதிதாக திறந்திருப்பதெல்லாம் சரி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து கொண்டிருந்த கோயம்பேடு பேருந்து நிலையம் என்ன ஆனது என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி.

CMBT-யின் சகாப்தம்

1999 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2002 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நிறுவப்பட்டு, திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையம் தான் கோயம்பேடு. கிட்டத்தட்ட 103 கோடி செலவில் 36 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இடம் எது. ஒரு நாளில் மட்டும் இங்கு இரண்டு லட்சம் பயணிகள் பயணித்துக் கொண்டே இருந்தார்கள்.

பஸ் ஸ்டாண்ட் முகப்பு பக்கத்தில் மாநகர பேருந்துகள், உள்ளே போனால் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு போகும் பேருந்துகள், அதன் பின்புறத்தில் ஆம்னி பஸ்கள் என சென்னையின் இதயமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது இந்த பேருந்து நிலையம். பயணம் செய்வதற்காக என்று இல்லாமல், தங்களுடைய வாழ்க்கையை தேடி வந்த எத்தனையோ பேருக்கு இத்தனை வருடங்களாக சோறு போட்டுக் கொண்டிருந்தது இந்த கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்.

சின்ன சின்ன கடைகளில் இருந்து, பெரிய ஹோட்டல்கள் வரை இந்த பஸ் ஸ்டாண்ட்டை நம்பி இயங்கிக் கொண்டிருந்தது. பஸ் விட்டு இறங்கும்போதே ஆட்டோக்காரர்கள் நம்மை வரவேற்பது உண்டு. இப்போது இந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதால் கிட்டத்தட்ட 470 ஆட்டோ டிரைவர்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை நம்பி தொழில் தொடங்கிய அத்தனை பேரின் வாழ்வாதாரமும் இப்போது முடக்கப்பட்டிருக்கிறது. வெளியூர் செல்லும் பயணிகள் பலருக்கும் இன்றுவரை கிளாம்பாக்கம் செல்வது எப்படி என்று தெரியவில்லை. கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சொல்லி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என ஏற்பாடு செய்யப்பட்டு கூட்ட நெரிசலை அதிகரித்து தான் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் இப்போது ஒரு பெரிய பேருந்து நிலையம் இல்லை என்பதுதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிதர்சனமான உண்மை. . சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. வியாபாரிகளுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்படாததால், அவர்கள் வாங்கி வைத்த சரக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் இப்போது கிளாம்பாக்கம் செல்ல வேண்டும் என்றால் ஒரு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் கண்டிப்பாக அரசு பேருந்துகளை தவிர்த்து, ஆம்னி பேருந்துகளை தான் நாட போகிறார்கள். ஆம்னி பேருந்துகள் ஏற்கனவே கட்டணத்தில் ராஜாவாக இருக்கிறார்கள், இப்போது இதுதான் சாக்கு என டிக்கெட் விலையை எக்கச்சக்கமாக ஏற்றப் போகிறார்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை அப்படியே இயங்க விட்டுவிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேறு முறையை அரசு கையாண்டு இருக்கலாம் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. தற்போது கோயம்பேடு பேருந்து நிலையம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, அங்கு புகழ்பெற்ற லூலு மால் அமைக்கப்பட இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மிகப்பெரிய குண்டை தூக்கி தலையில் போட்டிருக்கிறார்.

Trending News