காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த கால கட்டத்திலேயே தொடர்ந்து சில சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து விருவிருவென முன்னேறி வந்தார் கருணாஸ். பாலா இயக்கிய நந்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அன்றுவரை கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோரின் காமெடி காட்சிகளை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு, அதே அளவு இல்லையென்றாலும் தன்னால் முடிந்த அளவு ரசிக்க வைக்கும் திறமை கொண்டவராக இருந்தார் கருணாஸ்.
ஆரம்ப காலகட்டங்களில் அவர் நடித்த காமெடி கதாபாத்திரங்கள் அனைத்துமே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. இந்நிலையில் திண்டுக்கல் சாரதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படமும் முதலுக்கு மோசமில்லை எனும் அளவுக்கு ஓடியது.
அதனைத் தொடர்ந்து சில படங்களை சொந்தமாக தயாரித்து ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு மீண்டும் காமெடி கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார் கருணாஸ்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக ஆதார் என்ற படத்தில் நடிக்க உள்ளார் கருணாஸ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளரும் மெட்ராஸ் பட நாயகியுமான ரித்விகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தின் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றது. வேகமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் படத்தை வெளிக்கொண்டுவர திட்டமிட்டுள்ளது படக்குழு.