வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் சில சுவாரசியமான சினிமா தகவல்களை தொடர்ந்து கண்டு வருகிறோம். தமிழ் சினிமாவில் அதிகம் காணக் கிடைப்பது காதல் கதைகளே. காதல் திரைப்படங்கள் மினிமம் கேரண்டி என்பதால் அவ்வகை திரைப்படங்கள் எப்போதும் புழக்கத்தில் இருக்கும். சில காதல் கதைகள் நமது நெஞ்சில் நீங்கா இடம்பெற்று இருப்பதற்கு காரணம் அதன் சோகமான கிளைமாக்ஸ். அந்த வகையில் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ புதுவகை வியாதி இருந்து முடியும் காதல் கதைகளை இங்கே காணலாம்.
நம்மவர்: கமல்ஹாசன் நடிப்பில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படம் நம்மவர். இந்த படத்தில் கமல்ஹாசன் உதவி பிரின்ஸ்பால் ஆக நடித்திருப்பார். அந்த கல்லூரிகளில் இளைஞர்களிடம் பரவி வரும் போதை பழக்கத்தை ஒழிக்க பலவித முயற்சிகளை மேற்கொள்வார். இந்தப் படத்தில்தான் நடிகர் கரண் வில்லனாக அறிமுகமானார். அவருக்கும் கமலுக்கும் இடையில் நடக்கும் காட்சிகள் அருமையாக இருக்கும். இந்த படத்தின் இறுதியில் கமலுக்கு ரத்தத்தில் புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டிருக்கும். இருந்தாலும் படத்தில் இவர் இறப்பது போல காட்டப்பட்டிருக்காது. உண்மையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மகேஷ் மகாதேவன் அவர்களுக்கு ரத்தத்தில் புற்றுநோய் இருந்தது என்பது குறிப்பிட வேண்டியது. இதனை வைத்து அப்படத்தின் கதாபாத்திரத்திற்கு இந்த நோயை குறிப்பிட்டிருந்தனர்.
அஞ்சலி: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாம்லி, ரகுவரன், பிரபு, ரேவதி மற்றும் பலர் நடித்த திரைப்படம் அஞ்சலி. அஞ்சலி பாப்பாவாக நடித்த ஷாமிலியின் நடிப்பு அப்போது பெருவாரியாக ரசிக்கப்பட்டது. அஞ்சலிக்கு நரம்பு மற்றும் மூளை வளர்ச்சி சம்பந்தப்பட்ட குறைபாடு இருப்பதால் அவளால் மற்ற குழந்தைகள் போல செயல்பட முடியாமல் இருக்கிறார். அவருடைய இறப்பு மிக சீக்கிரம் நடக்கப் போகிறது என்பது தெரிந்த பிறகு அவரது குடும்பத்தினர் காட்டும் பாசம் நம்மை நெகிழச் செய்யும். இந்தப்படத்திற்கு தரமான இசையை இசைஞானி இளையராஜா வழங்கியிருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1990 ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகளில் தேசிய விருது பெற்றது இந்த திரைப்படம்.
இதயத்தை திருடாதே: இந்தத் திரைப்படத்தையும் இயக்கியது மணிரத்னம், இசையமைத்தது இளையராஜா. பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். தெலுங்கு படமாக இருந்தாலும் இந்தப் படம் தமிழிலும் சக்கைப்போடு போட்டது. கீதாஞ்சலி என்ற தெலுங்கு படத்தை தமிழில் இதயத்தை திருடாதே என்று மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் கதாநாயகன் கதாநாயகியாக நாகார்ஜுனா, கிரிஜா நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் நாயகன் நாயகி இருவருக்கும் இரு வேறு நோய்கள் கண்டறியப்பட்டு இருக்கும். அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த திரைப்படம் அழகாக விவரிக்கிறது. நிச்சயம் மிஸ் செய்யக்கூடாத காதல் திரைப்படம்.
உயிரோடு உயிராக: அஜித் ஆரம்ப காலங்களில் நடித்த காதல் திரைப்படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரிச்சா நடித்திருந்தார். கதைப்படி அஜித் அவர்களுக்கு மூலையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப் பட்ட பிறகும் கதாநாயகி எப்படி அவர் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்பதே படத்தின் அடிநாதம். பாடல்களெல்லாம் அருமையாக அமைந்த இந்த திரைப்படத்திற்கு இசை வித்யாசாகர். விமர்சன ரீதியாக நல்ல பெயர் பெற்ற போதும் இந்த திரைப்படம் வணிகரீதியாக சரியாக போகவில்லை.