தனது தந்தையும், தமிழ் சினிமாவின் நவரச நாயகனுமான கார்த்திக் சினிமாவில் அறிமுகமாகி 40 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக நடிகர் கௌதம் கார்த்திக் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரதிராஜாவின் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அலைகள் ஓய்வதில்லை.
இன்றளவும் ஒரு காதல் காவியமாக திகழும் இப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகன் என்ற அறிமுகத்தோடு இப்படத்தில் அறிமுகமான கார்த்திக் விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்திலும், இவருக்கு ஜோடியாக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ராதாவும் தங்கள் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
1981ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 18) தான் அலைகள் ஓய்வதில்லை படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால், எஇப்படத்தில் நடித்ததற்காக, கார்த்திக்கிற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.
பிறகு கார்த்திக், தனி பாதையுடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். அந்த காலகட்டத்தில் அவருடைய கால்ஷீட் கேட்டு காத்திருந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அதிகம்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் 40 வருடங்களை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உருவாக்கிய போஸ்டர் ஒன்றை நடிகர் கௌதம் கார்த்திக் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். கார்த்திக்கிஷம் 40 வருஷம் என்று எழுதப்பட்டுள்ள அந்த போஸ்டரில் #40YearsOfNavarasaNayagan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உள்ளார். இதை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.