இயக்குனர் கௌதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் ரிலீஸ் ஆன திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இந்த படம் முழுக்க முழுக்க சாதிய அரசியலை எதிர்க்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. வீரம் மற்றும் சாதிக் கொடுமைகளை அழுத்தமான வசனங்களின் மூலம் பேசி இருக்கிறது இந்த படம். அருள்நிதி வழக்கம்போல தன்னுடைய சிறந்த நடிப்பினால் படத்தை காப்பாற்றி இருக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கியமான இந்த ஐந்து வசனங்கள் படம் பார்ப்பவர்கள் இடையே கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
இந்த படத்தில் அருள்நிதி மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவரும் நெருங்கிய நண்பர்கள். சந்தோஷ் பிரதாப் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் அவர், “நீங்கள் இன்னொருத்தர் தலைக்கு மேல் இருப்பதாக நினைக்கிறீர்கள், ஆனால் நீங்களே ஒருத்தனின் காலுக்கடியில் தான் இருக்கிறீர்கள் என்று வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற ஒரு வசனம் வரும். இது சாதியை வைத்து செய்யும் அரசியலை பற்றி எழுதப்பட்ட வசனம்.
Also Read:அதிரடி, காதல் என வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன்.. படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண் யார்?
அதே போன்று இன்னொரு காட்சியில் “போடுற சட்டைக்கு தெரியாது அதை யார் போடுறாங்கன்னு, யார் போட்டாலும் அழகான சட்டை அழகாகத்தான் தெரியும்” என்று பேசியிருப்பார். இதுவும் சாதிய அரசியலுக்கு எதிராக பேசப்பட்ட வசனம் தான். இந்த வசனமும் தியேட்டரில் பயங்கர ரெஸ்பான்ஸ் பெற்றது.
மற்றொரு காட்சியில், “சாமி பெயர் சொல்லி அடிச்சிக்கிட்டு செத்தீங்கன்னா, அந்த சாமியே இல்லைன்னு நீங்க சொல்றீங்க, அடி வாங்குறவன் பக்கம்தான் நம்ம நிக்கணும், அவன அடி வாங்காம காப்பாத்தணும்” என்று பேசி இருப்பார். இது மத அரசியலுக்கு எதிராகவும், மதத்தால் நடக்கும் வன்முறையை பற்றியும் பேசிய வசனம்.
அதேபோன்று இந்த படத்தின் ஒரு காட்சியில், “இங்கே பதில் சொல்வதற்கு மட்டும் அறிவு தேவை படாது, கேள்வி கேட்பதற்கு அறிவு ரொம்ப அவசியம். நம்ம கேக்குற கேள்வியில மத்தவங்க பதில் சொல்ல முடியாமல் திணறனும், அந்த மாதிரி கேள்வி இருக்கணும்.” என்று சொல்லி இருப்பார். இது கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதப்பட்ட வசனம் ஆகும்.
“ஒருவரை கொலை செய்வது வீரம் இல்லை, 10 பேர காப்பாற்றுவது தான் வீரம்,” என்று வீரம் எப்படி இருக்க வேண்டும் என வசனத்தில் சொல்லி இருப்பார்கள். அதேபோன்று “ஓட்டு போடுவதற்கு அவன் நல்லவனா கெட்டவனா என்பது அவசியமில்லை, ஒரே ஜாதிக்காரனா இருந்தா போதும்” என்று இன்றைய அரசியலின் பரிதாப நிலையை பற்றியும் பேசி இருப்பார்கள்.