5 Malayalam films that crossed 100 crores in world wide: சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களே 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை செய்து வந்த நிலையில் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மலையாள திரைப்படங்கள் அசால்ட்டாக 100 கோடியை தாண்டி கெத்து காட்டி வருகிறது. அவ்வாறு உலக அளவில் 100 கோடியை தாண்டி சாதனை படைத்த 5 மலையாள திரைப்படங்களை காணலாம்.
2018 Everyone is a Hero: பேரிடர் காலங்களில் மனிதனுக்கு இயல்பாக தோன்றும் மனிதத்தை அழகாக காட்சிப்படுத்தி இருந்தது இத்திரைப்படம். மலையாள திரைப்படங்களிலேயே 175 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தை தக்கவைத்தது.
பெருமழையானது ஜாதி, மதத்தை தூளாக்கி வாழ்வியல் சூழலை புரட்டிப்போட்டு, பணக்காரனை மண்டியிட செய்து, அவனது ஆணவத்தை கட்டறுக்கும் கதையை வெகு இயல்பாக காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குனர் ஜுட் ஆன்டனி ஜோசப்.
லூசிஃபர்: நடிகர் பிருத்திவிராஜ் இப்படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமானார். சூடு பிடிக்கும் அரசியல் களத்தில் அரசியல் சாணக்கியனாக, பல்வேறு சூழ்ச்சிகளை அவிழ்க்கும் ஸ்டீபன் நெடும்பள்ளியாக கலக்கினார் மோகன்லால். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் 128 கோடியை தாண்டியது.
புலிமுருகன்: 2016 ல் மோகன்லால், கமலினி முகர்ஜி நடிப்பில் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமே புலி முருகன். மலைவாழ் மக்களின் எதார்த்த சூழலை காட்சிப்படுத்தி மனிதர்களை விட மிருகங்களை கையாள்வது எளிது என்பதை நிரூபித்து வசூலில் 144 கோடி கடந்து சாதனை செய்தது இந்த புலி முருகன்.
மலையாள சினிமாவை தெறிக்க விட்ட மஞ்சுமல் பாய்ஸ்
மஞ்சுமல் பாய்ஸ்: 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழகத்திலேயே அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சிதம்பரம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இன்று வரை 173 கோடியை தாண்டி சாதனை செய்து வரும் இத்திரைப்படம் 200 கோடியை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பிரேமலு: காதலை முன்னிறுத்தும் இயக்குனர் க்ரிஷின் பிரேமலு திரைப்படத்தில் மமிதா பைஜூ மற்றும் நஸ்லேன் நடித்திருந்தனர். 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் வசூலில் 100 கோடியை தாண்டி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு வருகிறது.