வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டெல்லி கணேஷ் நடிப்பில் இந்த 5 படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.. அவ்வை சண்முகியை அலற விட்ட சேதுராமன் அய்யர்

Delhi Ganesh: நடிகர் டெல்லி கணேஷ் என்பதாவது வயதில் காலமாகி இருக்கிறார். தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் அசாத்தியமாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவர் இவர்.

உலகநாயகன் கமலஹாசன் பெரும்பாலும் தன்னுடைய படங்களில் டெல்லி கணேஷுக்கு வாய்ப்பு கொடுத்து விடுவார். இனிவரும் காலங்களில் டெல்லி கணேசன் என்ற ஒரு சிறந்த நடிகர் இருந்தார் என்ற அடையாளத்திற்காக இந்த ஐந்து படங்களை சொல்லலாம்.

அவ்வை சண்முகியை அலற விட்ட சேதுராமன் அய்யர்

அவ்வை சண்முகி: முழுக்க முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் தான் அவ்வை சண்முகி. இந்த படத்தில் சேதுராமன் ஐயர் என்ற கேரக்டரில் ஜெமினி கணேசனின் உதவியாளராக டெல்லி கணேஷ் நடித்திருப்பார். அந்த வீட்டில் பணம் மற்றும் பொருட்களை ஆட்டை போட அவருடைய ஆட்களை வீட்டிற்குள் செட் பண்ணுவார்.

குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு மாமியை அவர் செட் பண்ண, அவரைத் தாண்டி கமலஹாசன் அந்த வீட்டிற்குள் அவ்வை சண்முகியாக நுழைந்து விடுவார். தன்னுடைய திட்டத்தை முறியடித்த அவ்வை சண்முகியை படாத பாடு படுத்துகிறேன் என்ற பெயரில் டெல்லி கணேஷ் இந்த படத்தில் செய்யும் அலப்பறை பெரிய சிரிப்பலையை ஏற்படுத்தும்.

சிந்து பைரவி: இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கிய அமர காவியங்களில் ஒன்று சிந்து பைரவி. இதில் சிவக்குமாருடன் இருக்கும் இசை கலைஞர் குருமூர்த்தி என்ற கேரக்டரில் டெல்லி கணேஷ் நடித்திருப்பார். வழி தவறும் சிவக்குமார், அவர் என்ன செய்கிறார் என்ற உண்மையை அவருடைய மனைவி சுலோக்ஷனாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகள் என அத்தனையிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

பூவெல்லாம் கேட்டுப்பார்: சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் டெல்லி கணேஷ், நாசரின் நண்பராக நடித்திருப்பார். இரண்டு இசை கலைஞர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ போட்டியில் தன்னுடைய நண்பருக்கு முழு ஆதரவு கொடுக்கும் கேரக்டரில் படம் முழுக்க வந்திருப்பார்.

அவதாரம்: நாசர் மற்றும் ரேவதி இணைந்து நடித்த அவதாரம் படத்தில் பாண்டி என்னும் கேரக்டரில் டெல்லி கணேஷ் நடித்திருப்பார். நாடக குழு வைத்திருக்கும் இந்த பாண்டியை சுற்றி தான் முதல் கட்ட திரைக்கதைகள் மொத்தமும் இருக்கும். ஒரு கலைஞராக மேடையிலேயே இறந்து போகும் காட்சிகளில் எல்லாம் டெல்லி கணேஷ் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

ஆஹா: விஜயகுமார், பானுப்பிரியா, ரகுவரன், சுகன்யா, ஸ்ரீவித்யா என்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் உருவான படம் தான் ஆஹா . இதில் சமையல் கலைஞராக கணேசன் என்ற கேரக்டரில் டெல்லி கணேஷ் நடித்திருப்பார்.

தன்னைவிட வசதியில் குறைவாக இருக்கும் கணேசனின் மகளை தன் மகன் விரும்புவதை தெரிந்து விஜயகுமார் கணேசனை பெரிய அளவில் அவமானப்படுத்துவார். அந்த காட்சியாக இருக்கட்டும் அதை தொடர்ந்து வரும் காட்சியாக இருக்கட்டும் டெல்லி கணேஷ் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார்.

Trending News