இன்றைய காலத்தில் எத்தனை பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அதில், கதை, திரைக்கதை இதெல்லாம் நன்றாக இருந்தால் தான் மக்களே அப்படத்தை கொண்டாடுவர். இல்லையென்றால், அந்தக் காலம் மாதிரி, நடிகருக்காகவோ, பாட்டுக்காகவோ படம் ஓடுவது என்பது கொஞ்சம் கஷ்டமான விசயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 5 சின்ன பட்ஜெட் படங்களைப் பற்றி இதில் பார்க்கலாம்.
மகாராஜா
விஜய்சேதுபதி நடிப்பில், நிதிலன் சாமி நாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. இப்படத்தில் அனுராஜ் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், திவ்ய பாரதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜூன் 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரூ.20 பட்ஜெட்டில் உருவானதாக கூறப்பட்டது. ஆனால், இப்படம் உலகம் முழுவதும் ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சீனாவில் இப்படம் வெளியாகவுள்ளது. அங்கு ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என தெரிகிறது.
லப்பர் பந்து
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், ஹரீஸ் கல்யாண் ஆகியோர் நடிப்பில் உருவான படம் லப்பர் பந்து. இப்படத்தில், சஞ்சனா, ஸ்வாசிகா, கீதா கைலாசம், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.42 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
வாழை
மாரி செல்வராஜ் இயக்ககி அவரே தயாரித்த படம் வாழை. இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா, கலையரசன், பொன்வேல் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.40 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்படம் சினிமாத்துறையினர், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
லவ்வர்
மணிகண்டன் நடிப்பில், பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் உருவான படம் லவ்வர். இப்படத்தில், கெளரி பிரியா ரெட்டி, ஹரினி, கண்ணா ரவி, நிகிலா சங்கர், ஹரிஸ் குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சீன் ரோல்டன் இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
கொட்டுக்காளி
பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவான படம் கொட்டுக்காளி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். ஒரு மணி நேரம் ஓடும் இப்படம் சர்வதேச பல விருதுகளை வென்றது மட்டுமின்றி, ஆஸ்கர் வரை சென்று திரும்பியது. நாயகி அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு என்ன பிரச்சனை? என்பதுதான் படத்தின் கதை. இதை சுவாரஸ்யமாக கூறியிருந்தனர். ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படது நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.