புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காடுகளை மையப்படுத்தி உருவான 5 படங்கள்.. விக்ரம் பிரபுக்கு பிள்ளையார்சுழி போட்ட கும்கி

காடுகளை மையமாகக்கொண்டு எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த 5 படங்களும் ரசிகர்களை இயற்கையுடன் சேர்ந்து ரசித்துப் பார்க்க வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி, விக்ரம் பிரபுவின் சினிமா கெரியருக்கு பிள்ளையார்சுழி போட்டு சூப்பர் ஹிட் கொடுத்தது.

மைனா: பிரபு சாலமன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் சுருளி ஆக விதார்த் கதாநாயகனாகவும், மைனா ஆக அமலாபால் கதாநாயகியாகவும் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் தம்பி ராமையாவிற்கு துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் முழுவதும் மலைக்கிராமத்தில் சுற்றியே படமாக்கப்பட்டிருக்கும். கள்ளம் கபடமற்ற சுருளி-மைனா காதலை காடுகளை மையப்படுத்தி அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

பேராண்மை: பழங்குடியினரிடம் இருந்து உதித்தவராக ஜெயம் ரவி இந்த படத்தில் துருவன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இதில் 5 தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு பயிற்சியளிக்கும் அதிகாரியாக அவர்களை காட்டிற்குள் அழைத்து சென்று காட்டின் அழகையும் அதில் இருக்கும் ஆபத்தையும் காட்டியிருப்பார். கதைக்கு தேவை என்றால் எவ்விதமான கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என ஜெயம் ரவி இந்த படத்தில் தைரியமான நடிகராக கோவனத்துடன் மாட்டிற்கு பிரசவம் பார்த்து படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை கலக்கியிருப்பார்

கடம்பன்: ஆர்யா, கேத்ரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் கடம்ப வனத்தில் வாழும் பழங்குடியினரின் இடத்தை ஆக்ரமிக்கும் தொழில் அதிபர்களிடம் இருந்து காடுகளை காப்பாற்றுவதற்கான போராட்டம் தான் என்ற படத்தின் கதை. படம் முழுவதும் காடுகளில் சுற்றியே படமாக்கப்பட்டு பழங்குடியினரின் உணவு, உடை, வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம் ஆகியவற்றை இந்தப்படத்தில் அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

கும்கி: மைனா படத்தை இயக்கிய பிரபு சாலமன் தான் இந்த படத்தையும் இயக்கி இருப்பார். சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபுக்கு பிள்ளையார்சுழி போட்ட முதல் படமான இந்த படத்திற்கு பிறகு அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அவருக்கு மட்டுமல்லாமல் லக்ஷ்மி மேனனின் முதல் தமிழ் படமும் இதுதான்.

அறிமுக நட்சத்திரங்களை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் படத்தின் கதைக்களத்தை காடுகளை மையமாக வைத்தே உருவாக்கி இருப்பார். கொம்பன் யானையை விரட்டுவதற்காக கும்கி யானையை அழைத்து வருவார்கள். கும்கி யானை மாணிக்கத்தின் யானை பாகன் ஆன பொம்மனுக்கும் அல்லிக்கும் ஏற்படும் அழகான காதலை இயற்கை எழிலுடன் படமாக்கி இருப்பார்கள்.

காடன்: விலங்குகளுடன் வசிக்கும் காட்டு மனிதரான ராணா, குருவி யானை முதலிய காட்டு விலங்குகளுடன் பேசுவது என இந்தப் படம் முழுவதும் காடுகளுடன் மனிதர்கள் ஒன்றித்திருப்பது தான் இயற்கை என்பதை இயக்குனர் பிரபு சாலமன் அழகாக காட்டியிருப்பார். காடுகளை ஆக்கிரமித்து அட்டகாசம் செய்பவர்களை விரட்டி அடிப்பதற்காக ராணா, விஷ்ணு விஷால் உடன் இணைந்து காடுகளையும் காட்டு விலங்குகளையும் காப்பாற்றி இருப்பார்.

இந்தப் படங்கள் அனைத்தும் காடு முழுவதையும் சுற்றிக் காண்பித்து படத்தை பார்க்கக்கூடிய ரசிகர்களுக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சி அளித்து,  இன்றுவரை சினிமா பிரியர்களின் இஷ்டமான படங்களின் லிஸ்டில் உள்ளது.

Trending News