வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வக்கீலாக ஜொலித்த 7 நடிகர்கள்.. ஜெய்பீம் படத்தில் சாதித்துக் காட்டிய சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் பல்வேறு விதமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் வக்கீலாக நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது. அவ்வாறு வக்கீலாக கலக்கிய 7 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

ரஜினி : எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, ராதா, நம்பியார் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் மகான் அல்ல. இப்படத்தில் விஸ்வநாத் என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். இப்படத்தில் அப்பாவி பெண்களை பலாத்காரம் செய்யும் பண முதலைகளை எதிர்த்த ரஜினி போராடுகிறார்.

கமலஹாசன் : மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் கமலஹாசன், ஊர்வசி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அந்த ஒரு நிமிடம். இப்படத்தில் வக்கீல் குமார் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். இதில் சமூக பணிகளில் தீவிரம் காட்டும் கமல் கொலையாளியை நிரூபிக்க போராடுகிறார்.

சத்யராஜ் : நடிகர் சத்யராஜ் இயக்கி, மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் வில்லாதி வில்லன். இதில் மீனாட்சி சுந்தர சாஸ்திரியாக வக்கீல் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். தந்திரமான மற்றும் எதிலும் தோல்வி அடையாத ஒரு வெற்றிகரமான வக்கீலாக இப்படத்தில் நடித்திருந்தார்.

விஜய் : விஜய், பிரியங்கா சோப்ரா, நாசர், ரேவதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழன். இப்படம் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் கதையில் உருவானது. இப்படத்தில் சூர்யா என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருந்தார். இதில் வக்கீல் தொழில் செய்வதினால் தன் குடும்பத்தையே இழக்கிறார் விஜய். அதன்பின்பு நீதிபதிக்கு சவால் விடும் அளவிற்கு அடித்தட்டு மக்களுக்கும் சட்டத்தை புரிய வைக்கிறார்.

அஜித்: எச் வினோத், போனிகபூர், அஜித் கூட்டணியில் முதல் முறையாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் பரத் சுப்பிரமணியம் என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். சிக்கலில் உள்ள மூன்று பெண்களை தனது வாதம் மூலம் காப்பாற்றுகிறார் அஜித்.

உதயநிதி ஸ்டாலின் : உதயநிதி, ஹன்சிகா, பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மனிதன். இப்படத்தில் சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் காமெடி பீசாக இருக்கும் உதயநிதி கடைசியில் கூட்டு களவாணித்தனம் செய்யும் போலீஸையும் வக்கீலையும் துணிச்சலாக தோலுரித்து காட்டுகிறார்.

சூர்யா : சூர்யா போலீசாக நடித்த சிங்கம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்த ஜெய்பீம் படத்தில் சந்துரு என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Trending News