தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அமீர். இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதனை அடுத்து அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். தாய் மற்றும் மகன் இருவருக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் மட்டுமல்லாமல் இதில் இடம்பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தற்போது வரை இப்படம் பலரது பாராட்டை பெற்று வருகிறது. இதனை அடுத்து அமீர் மூன்றாவதாக இயக்கிய படம்தான் பருத்திவீரன். இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் இணைந்தது. கிராமத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் எதார்த்தமான கிராம மக்களின் வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
இப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி. பருத்திவீரன் படம் கார்த்திக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இதன் மூலம் அடுத்தடுத்து அவர் பல புதிய படங்களில் ஒப்பந்தமானார். இன்றுவரை பருத்திவீரன் போன்ற எந்த ஒரு படமும் தமிழ் சினிமாவில் வெளியாகவில்லை. அந்த அளவிற்கு இப்படமும், இதில் இடம்பெற்றிருந்த கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
கார்த்திக்கு மட்டுமல்லாமல் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்த பிரியாமணிக்கும் பருத்தி வீரன் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கிளைமாக்ஸில் வில்லன்கள் சிலர் பிரியாமணியை கற்பழிப்பது போலவும், அதனை அடுத்து நாயகன் கார்த்தியே பிரியாமணியை கொலை செய்வது போலவும் படமாக்கப்பட்டிருந்தது.
ஆனால் உண்மையில் பருத்தி வீரன் படத்திற்காக 8 கிளைமாக்ஸ் சீன்கள் தயார் செய்யப்பட்டிருந்ததாம் அதில் ஒன்றுதான், “கடைசியாக கதாநாயகியை கற்பழிக்க வரும் வில்லன்களை நடிகர் கார்த்தி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு செல்வது போல் வைத்திருந்தார்களாம். பருத்திவீரன் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் கார்த்தி அவரது சித்தப்பாவிடம் எப்படியாவது சென்றல் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என அவரது ஆசையை கூறியிருப்பார்.
அந்த வசனத்திற்காகத்தான் படத்தின் இறுதியில் கதாநாயகன் வில்லன்களை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்வது போல் அமைத்திருந்தார்களாம். ஆனால் இறுதியில் முத்தழகு கதாபாத்திரத்தை பருத்தி வீரன் கொன்று விடுவது போல் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.