அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படம் தல ரசிகர்களை மிகவும் சோதனைக்குள்ளாக்கி வருகிறது. படம் ஆரம்பித்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் ஃபர்ஸ்ட் லுக் விட்ட பாடில்லை. தல ரசிகர்களும் பார்க்கும் இடத்திலெல்லாம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுமாறு கத்திவிட்டனர், கதறி விட்டனர். ஆனால் அஜித் மசிவதாக தெரியவில்லை.
இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன தல ரசிகர்கள், அவரவர்கள் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர். அதனால் எப்போதுமே தல அஜித்தின் பிறந்த நாளுக்கு ஆர்வமாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் தல ரசிகர்கள் இந்த முறை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நாங்களே சோகத்தில் இருக்கிறோம் நீங்க வேற என்பதை போல நடந்து கொண்டனர்.
படத்தின் ரிலீஸ் தேதியை பல முறை மாற்றிப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் தேதியை இரண்டு முறை மாற்றிய முதல் படக்குழு வலிமை படமாகத்தான் இருக்கும். இருந்தாலும் எப்போது வந்தாலும் தல ரசிகர்கள் அதை கொண்டாட தயாராகத் தான் இருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க தல அஜித் மீண்டும் ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மோதுவதற்கான அனைத்து சூழ்நிலைகளும் உருவாகிக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது. 2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகி நல்ல வசூலை பெற்றன.

இதில் தமிழகத்தில் விஸ்வாசம் படமும் உலகளவில் பேட்ட படமும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் மீண்டும் வருகின்ற தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த மற்றும் அஜித்தின் வலிமை படங்கள் மோதுவதற்கு வாய்ப்புகள் அதிகமாம். முதலில் ஆகஸ்ட் மாதம் வலிமை ரிலீசை முடிவு செய்திருந்த படக்குழு தற்போது படப்பிடிப்பு முடிப்பதற்கு லேட்டாகுமாறு தெரிவதால் தீபாவளிக்கு செல்ல முடிவு செய்துள்ளார்களாம்.
