திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

நடிகர் அருண் விஜய் படத்திற்கு உருவான புதிய சிக்கல்.. படத்தை வெளியிட தடை கோரி வழக்கு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான அருண் விஜய் தற்போது அவரது மாமாவும், பிரபல இயக்குனருமான ஹரி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கமான ஹரி படங்கள் பாணியிலேயே இப்படமும் உருவாகி வருகிறது.

இதுதவிர நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஓ மை டாக் என்ற படத்தில் அருண்விஜய் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மேலும் ஏற்கனவே அருண் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குற்றம் 23 படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார். அவருக்கு நாயகியாக நடிகை ரெஜினா நடித்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது பார்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பார்டர் படத்தை வெளியிட தடை கோரி டோனி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சார்லஸ் ஆண்டனி சாம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சார்லஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, “பார்டர் என்ற தலைப்பில் நான் ஏற்கனவே படம் ஒன்றை தயாரித்துள்ளேன். மேலும் இப்படத்தின் தலைப்பை முன்னதாகவே முறைப்படி பதிவும் செய்துள்ளேன். ஆனால் அருண் விஜய்யின் நடிப்பில் தற்போது பார்டர் என்ற பெயரில் உருவாகியுள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

arunvijay-border-firstlook-poster
arunvijay-border-firstlook-poster

இப்படம் வெளியானால் எனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். எனவே அருண் விஜய்யின் பார்டர் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் பார்டர் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, தலைப்பை பதிவு செய்த தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Trending News