திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கீர்த்தி ஷெட்டியுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி.. அதற்கு அவர் கூறிய காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பு மற்றும் விடாமுயற்சி மூலமாக தற்போது டாப் நடிகர்கள் பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது எதார்த்தமான நடிப்பு காரணமாகவே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல் இவரைத் தேடி படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. கால்ஷீட் டைரி நிரம்பி வழியும் அளவிற்கு ஏராளமான பட வாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த விஜய் சேதுபதி சமீபகாலமாக பிற மொழிகளிலும் தனது கவனத்தை திசை திருப்பியுள்ளார். அந்த வகையில் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கால் பதித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, சமீபத்தில் தெலுங்கில் உப்பென்னா என்ற படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் எகிற தொடங்கியது. தற்போது தமிழை விட தெலுங்கில் இவருக்கு அதிகமான படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. இதுதவிர இந்தியில் ஒரு வெப் தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இதுதவிர கடைசி விவசாயி, மாமனிதன் ஆகிய படங்களும் முடிவடையும் நிலையில் உள்ளன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் கதை என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, “அவர் எனக்கு மகளாக நடித்துள்ளார். அவருடன் என்னால் ஜோடியாக நடிக்க முடியாது” என கூறி மறுத்து விட்டாராம். இதனால் கீர்த்தி ஷெட்டி அதிர்ச்சியில் உள்ளாராம்.

vijay-sethupathy-cinemapettai
vijay-sethupathy-cinemapettai

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பென்னா படத்தில் அவருக்கு மகளாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் எப்படி ஹீரோவாக நடிக்க முடியும் எனக்கூறி மறுத்துள்ள விஜய் சேதுபதியின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் தான் இவரை சிறந்த மனிதர் என அனைவரும் புகழ்ந்து வருகிறார்கள் போல! இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா?

Trending News