சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

#Justiceforaarthi.. கொந்தளிக்கும் பாண்டிச்சேரி, நெஞ்சை பதற வைக்கும் 9 வயது சிறுமி ஆர்த்தியின் மரணம்

Justiceforaarthi: ஒரு பெண் நள்ளிரவில் எப்போது சுதந்திரமாக நடந்து செல்கிறாரோ அப்போதுதான் நாட்டிற்கு சுதந்திரம் என்று காந்தி சொன்னதாக சொல்வதுண்டு. ஆனால் ஒரு ஒன்பது வயது சிறுமி மாலை நேரத்தில் வீட்டை விட்டு விளையாட சென்று பின் நான்கு நாட்கள் கழித்து சடலமாக கிடைத்திருக்கிறாள் என்றால் இதை விட மோசமான சமூகம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சமூக வலைத்தளத்தில் ஜஸ்டிஸ் ஃபார் ஆர்த்தி என்ற ஹேஷ் டாக் ட்ரெண்ட் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலமும் கொதித்து எழுந்து போய் கிடக்கிறது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் சூழலில் இனி பெண்கள் மட்டுமில்லை, குழந்தைகள் கூட வீட்டோடு முடங்கி கிடக்க வேண்டியதுதானா என்ற சந்தேகத்தை ஆர்த்தியின் மரணம் எழுப்பி இருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முத்தையால் பேட்டை பகுதியில் வசித்து வந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் ஆர்த்தி கடந்த மார்ச் இரண்டாம் தேதி மாலை விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ரொம்ப நேரம் கழித்தும் ஆர்த்தி வராததால் அவருடைய அம்மா ஆர்த்தியை பதறிப் போய் தேடியதோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.

ஆர்த்தியை தேடும் பணி எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாததால் சோலை நகர் காவல் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்குள்ள பகுதிகளின் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது ஆர்த்தி அந்த இடத்தை விட்டு வெளியில் செல்லவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் அந்தப் பகுதியில் அம்பேத்கர் என்னும் இடத்தில் சாக்கடை கால்வாயில் ஒரு மூட்டை மிதந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.

காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று மூட்டையை அவிழ்த்து பார்த்த போது ஆர்த்தியின் உடல் போர்வை மற்றும் பெட் சீட்டுக்களால் புதிய பட்ட அந்த மூட்டைக்குள் இருந்திருக்கிறது. ஆர்த்தியின் மரணம் எதனால் நிகழ்ந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். 9 வயது சிறுமியை கொன்று மூட்டை கட்டி வீசும் அளவுக்கு மிருகங்களை விட மோசமாக மாறியிருக்கிறார்கள் மனிதர்கள்.

விளையாடிக்கொண்டிருந்த ஆர்த்தியை நோட்டமிட்டு ஒரு கும்பல் தனியாக கடத்தி வந்து கொலை செய்து மூட்டை கட்டி தூக்கி போட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விவேகானந்தன், கருணாஸ் உட்பட ஆறு பேரை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை. சிறுமியின் உடற்கூறு ஆய்வு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தாசில்தார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் அதிகரித்த கஞ்சா பழக்கம் தான் இந்த கொலைக்கு காரணம் என அந்த மக்கள் தற்போது பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

Trending News