Hosur Airport: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு, வன்னியர் இட ஒதுக்கீடு என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய கூட்ட தொடரில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். ஒன்று சென்னை, மதுரை, கோயம்புத்தூரை தொடர்ந்து திருச்சியில் நவீன நூலகம் அமைப்பது. மற்றொன்று ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது.
கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவில், 30 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த பன்னாட்டு விமானம் அமைய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். பல தரப்பட்ட மக்களிடமிருந்தும் இந்த திட்டம் வரவேற்பு பெற்று வந்த நிலையில், பிஜேபி கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கை எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
அண்ணாமலை சொல்லும் காரணம்
அதாவது ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கவே முடியாது என அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அதாவது இந்திய அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் ஒப்பந்தத்தின்படி அந்த விமான நிலையம் அமைக்கப்பட்டு 25 வருடத்திற்கு 150 கிலோமீட்டர் பரப்பளவில் வேறு எந்த விமான நிலையமும் அமைக்க கூடாது என சொல்லப்பட்டு இருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஓசூர் விமான நிலையம் குறித்து கேட்ட கேள்விக்கு, அமைச்சர் வி பி சிங் தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார். ஓசூர் விமான நிலையம் TAAL என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது.
அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு தமிழக அரசு ஓசூர் விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மேம்படுத்தலாம் என்று 2022 ஆம் ஆண்டு சொல்லப்பட்டு விட்டது. இரண்டு வருடங்களாக எந்த முயற்சியும் எடுக்காமல், மீண்டும் அதையே சொல்லி மக்களை திமுக கட்சி ஏமாற்றுகிறது.
திமுக அரசால் தேவையான பேருந்துகளை வாங்க முடியாத நிலையில், 30 கோடி செலவில் விமான நிலையம் மேம்படுத்துவது எப்படி சாத்தியம். யாரை ஏமாற்ற இப்படி அறிக்கை விடுகிறீர்கள் என கேட்டிருக்கிறார்.