செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

இந்த வயதிலும் வடிவேலு எனக்கு தொல்லை கொடுக்கிறார்.. இது எல்லாம் அநியாயம்.. கொந்தளித்த சக நடிகர்

ஒரு காலத்தில் இவர்கள் காம்போ மக்களின் பேராதரவை பெற்றது. இவர்கள் திரையில் வந்தாலே சிரித்து விடுவார்கள். சொல்லப்போனால், கவுண்டமணி செந்திலுக்கு பிறகு, அவர்களை போல எலியும் பூனையுமாக சண்டை போட்ட ஒரு சிறப்பான காம்போ இது. ஆனால் படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும், இவர்களுக்கு ஒத்துப்போகாது. இவர்களுக்குள் தற்போது நடக்கும் சண்டையை பார்க்கும்போது கூட, மக்களுக்கு ஆதித்யா சேனலில் காமெடி பார்ப்பது போல தான் இருக்கும்.

ஆனால் அவர்களுக்கு அப்படி இல்லை. இரண்டு தரப்பும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பற்றி யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்குமாறு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் சிங்கமுத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“தமிழ் திரையுலகில் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துவது என்பது வழக்கமாக உள்ளது. தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளேன். இதன் மூலம் திரையுலகில் எனக்கும் நல்ல மதிப்பு உள்ளது. “

“என்னைப் பற்றி தவறான தகவல்களை பல தயாரிப்பாளர்களிடம் கூறி எனக்கான திரைப்பட வாய்ப்புகளை அவர் தான் கெடுத்தார். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்க அவர் என்னைப் பயன்படுத்திக் கொண்டார்.” இது தவிர இன்னும் பல விடயங்களை சிங்கமுத்து கூறியுள்ளார். மேலும், வடிவேலு சக நடிகர்களுக்கு நல்லது நினைக்க மாட்டார், அவர் ஒரு சுயநலவாதி என்று பல பேட்டிகளும் சிங்கமுத்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், இதற்கெல்லாம் உடனே ரியாக்ட் செய்யாமல், 3 வருடத்திற்கு பிறகு ரியாக்ட் செய்துள்ளார் வடிவேலு. அது தான் தேவையில்லாத குழப்பத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து தற்போது சிங்கமுத்து இதுக்கு பதிலும் கொடுத்துள்ளார்.

அதில், “நான் அவருடன் இருந்தபோது மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு வசனம் எழுதி கொடுக்க என்னை அனுமதிப்பதில்லை. ஆனால், அதையும் மீறி பல நகைச்சுவை நடிகர்களுக்கு நான் வசனம் எழுதி கொடுத்ததால் என்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.”

“மேலும், நான் வாங்கிக் கொடுத்த ஒரு சொத்தில் வில்லங்கம் இருந்ததால் அதைப் பயன்படுத்தி எனக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். அந்த சொத்தை வாங்கியதால் அவருக்கு எந்த நிதியிழப்பும் ஏற்படவில்லை. ஆனால், ரூ.7 கோடியை ஏமாற்றிவிட்டதாக அவர் எனக்கு எதிராக அளித்த புகார் காரணமாக இன்று வரை அந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறேன்.”

“நான் ஒருபோதும் வடிவேலுவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கத்துடன் பேசவில்லை. எனது சொந்த திரைத் துறை அனுபவத்தில், திரைத் துறையைச் சேர்ந்தவர்களின் பொதுப்படையான கருத்துகளை மட்டுமே தெரிவித்திருந்தேன். இதில் மான நஷ்ட ஈடு கோருவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

இது என்னை துன்புறுத்தும் நோக்கத்தில் தொடுக்க பட்ட வழக்கு.. எனக்கு வயதாகி விட்டது.. இப்போதும் எனக்கு தொல்லை கொடுப்பது சரியான விஷயம் இல்லை ” என்று கோவத்துடனும் வருத்தத்துடனும் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நெட்டிசன்ஸ் என்னதான் வடிவேலுவை ரசித்தாலும், ஆதரவு என்னவோ சிங்கமுத்துவுக்கு தான் கொடுத்து வருகிறார்.

Trending News