வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தேர்தல் கருத்துக்கணிப்புகளால் குழம்பும் மக்கள்.. காசு, பணம், துட்டு பண்ணும் வேலை

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தலுக்கான முந்தைய கருத்துக் கணிப்பை பல தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தனியார் தமிழ் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பு மிகக் குறைந்த அளவிலான மக்களிடம் கேட்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களை கொண்டது என்றும், அது மக்களை திசை திருப்பி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல் விஞ்ஞானரீதியாக போதுமான அளவு சாம்பல்கள் இல்லாத கருத்துக் கணிப்பை வெளியிட்டு உள்ளதால் சமூக வலைத்தளங்களில் சில பத்திரிக்கையாளர்களும், அரசியல் நோக்கர்களும் இந்தக் கருத்துக் கணிப்புகளை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதாவது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பல்வேறு தனியார் அமைப்புகள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.  அந்தவகையில் ஜனநாயகத்தின் குரல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி 122  இடங்களையும் திமுக 111 இடங்களையும் பெறும்  என்றும் இரு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க புதிய தலைமுறை எனும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதில்  வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள், கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட விதம் ஆகிய இரண்டுமே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது புதிய தலைமுறை எடுத்த கருத்துக் கணிப்பு தமிழகத்தை 5 மண்டலங்களாக  பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 20 மாவட்டங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சட்டமன்ற தொகுதி, அதில் 10 இடங்கள் என ஒவ்வொரு இடத்திலும் 25 நபர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே  29 லட்சத்து 23 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ள நிலையில் வெறும் 5,000 பேரிடம் மட்டுமே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குறைந்த அளவு நபர்களிடம் மட்டுமே கருத்துக்கள் கேட்கப்பட்டு அதன் விவரங்களை தனியார் தொலைக்காட்சி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

எனவே இந்த புள்ளி விவரங்களை வைத்து உண்மை நிலவரத்தை அறிய முடியாது என்று பல புள்ளியியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த கருத்துகணிப்பு பிப்ரவரி 18ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதாவது சசிகலாவின் அரசியல் ஓய்வு அறிவிப்பிற்கு முன் இந்த கருத்துகணிப்பு நடைபெற்றுள்ளது.

ஆனால் சசிகலாவின் அறிவிப்பிற்கு பின்பு பல அரசியல் மாற்றங்கள் தமிழக அரசியல் அரங்கில் நடைபெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி, தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளர் அறிவிப்பு என முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் புதிய தலைமுறை நடத்திய கருத்துக் கணிப்புக்கு பின்தான் நடைபெற்றுள்ளது.

இதனால் தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் கள யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இல்லை என பல அரசியல் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் குறைந்த எண்ணிக்கையிலான மக்களிடம் மட்டுமே கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு இருப்பதால் இந்த தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

Trending News