சிம்பு தற்போது சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்தாலும் அவருடைய பழைய பஞ்சாயத்துக்கள் அவரை விட்டபாடில்லை. சிம்பு புதிதாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகும்போது ஏதாவது ஒரு பஞ்சாயத்து வந்து கொண்டே இருக்கிறது.
அந்தவகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிம்பு நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பல கோடி நஷ்டமானது.
அந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக இலவசமாக படம் தருவதாகச் சொல்லி கொடுத்த சிம்பு அதன் பிறகு அவர் பக்கமே செல்லவில்லை. இதனால் கடுப்பான மைக்கேல் ராயப்பன் தொடர்ந்து சிம்புவின் புதிய புதிய படங்கள் அறிவிப்பு வெளியாகும் போதும் குறுக்கே புகுந்து கட்டையைப் போட்டார்.
இப்போது கூட சிம்பு மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த பிரச்சனை பூதாகரமாக வெளிவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்பு கொடுக்க வேண்டிய அனைத்து பணத்திற்கும் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்துவிட்டாராம். இதனால் பஞ்சாயத்து சுமுகமாக முடிவு பெற்றது.
இருந்தாலும் கோலிவுட் வட்டாரங்களில் சிம்புவை நம்பி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பது சரியில்லை என்றே கூறுகின்றனர். வேதாளம் எப்ப வேண்டுமானாலும் முருங்க மரம் ஏறலாம் எனவும் எச்சரிக்கிறார்கள். ஆனால் சிம்புவுக்கு ஐசரி கணேஷ் மீது நல்ல மரியாதை இருப்பதால் கண்டிப்பாக அவர் பேச்சை தட்ட மாட்டார் என்கிறார்கள். எது எப்படியோ, பஞ்சாயத்து முடிந்தால் சரிதான் என்கிறார்கள் எஸ்டிஆர் ரசிகர்கள்.