வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சார்பட்டா டான்சிங் ரோஸ் இந்த பிக்பாஸ் நடிகரின் மாணவராம்.. அட இது தெரியாம போச்சே.

தமிழ் சினிமாவில் ரெட்டச்சுழி படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். ஆனால் அதன் பின்னர் வெளியான நெடுஞ்சாலை படம் மூலமாகவே இவர் பிரபலமானார். அதனை தொடர்ந்து மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிப்பு தவிர பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் ஆரி கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் எல்.வி.பிரசாத் பிலிம் & டிவி அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு நடிப்புக்கான பயிற்சி வகுப்பு எடுத்துள்ளார். இதில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆரி, “எல்.வி.பிரசாத் பிலிம் & டிவி அகாடமியில் நடிப்பு பயிற்சி இந்த ஆண்டுதான் தொடங்கியுள்ளது. இந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் தான், நாளைய வெள்ளித்திரையில் ஜொலிக்க போகும் நட்சத்திரங்கள்.

நான் நடிப்பு பயிற்சியாளனாக எனது பயணத்தை இனிது இனிது திரைப்படத்தில் தொடங்கினேன். காலப்போக்கில் நான் நடிகனாக மாறியதால் அதில் இருந்து பல ஆண்டுகள் விலகி இருந்தேன். இப்போது சிறப்பு நடிப்பு பயிற்சியாளராக இந்த அகாடமியில் வகுப்பு எடுத்தது எனக்கு மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும் என நம்புகிறேன்.

இப்போது சார்ப்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் எனது மாணவர் தான். அவரை திரையில் காணும்போது நான் அதிகம் சந்தோசப்பட்டேன். அப்படித்தான் இந்த அகாடமியிலிருந்து செல்லும் மாணவர்கள் யாரேனும், நாளை வெள்ளி திரையில் ஜொலித்தால் அவர்களின் பெற்றோர்களை விட நான் அதிகம் சந்தோசப்படுவேன்” என கூறினார்.

தற்போது ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சார்பட்டா படத்தில் டான்ஸிங் ரோஸ் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ஷபீர் நடித்து மிரட்டியிருப்பார். இப்படத்தில் ஆர்யாவைவிட ஷபீரின் கதாபாத்திரம் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் நடிகர் ஆரியின் மாணவர் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News