ஆக்சன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பெரும்பாலும் அதிகமான சண்டைக்காட்சி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார். அதிலும் போலீஸ் கெட்டப்பில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பையே மிஞ்சி இருக்கிறார்.
ஜெய்ஹிந்த்: 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கி நடித்த அதிரடித் திரைப்படமான இந்த படத்தில் அர்ஜுனுடன் ரஞ்சிதா, கவுண்டமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் அர்ஜுன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பில் மிரட்டியிருப்பார்.
மேலும் இதில் நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை சும்மா விடாமல் நடவடிக்கை எடுத்து, போலீஸ் என்றால் எவ்வளவு பவர், எவ்வளவு கெத்து என இந்தப் படத்தில் காட்டியிருப்பார்.
சேவகன்: இந்த படத்தை அர்ஜுன் தயாரித்து இயக்கி நடித்திருப்பார். இதில் அர்ஜுனுக்கு ஜோடியாக குஷ்புவும் இவர்களுடன் நாசர், செந்தில் உள்ளிட்டோரும் இணைந்து நடித்திருப்பார்கள். இதில் அர்ஜுன் டிஎஸ்பி சஞ்சய் கதாபாத்திரத்தில் நேர்மையான யாருக்கும் அஞ்சாத காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இதில் பல இடையூறுகள் வந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை அர்ஜுன் காவல் துறையின் தலையாய கடமையை வெளிக்காட்டியிருப்பார்.
செங்கோட்டை: மீனா, ரம்பா என இரண்டு கதாநாயகிகளுடன் அர்ஜுன், சேகர் ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்திருப்பார். இதில் அர்ஜுனின் காதலியாக நடிக்கும் ரம்பா எதிரிகளால் கொல்லப்பட்டு, அதன்பிறகு சிறையில் இருக்கும் மீனாவை திருமணம் செய்துகொண்டு, மீனாவின் மீது இருக்கும் குற்றம் சித்தரிக்கப்பட்டது என காவல்துறை அதிகாரியாக இருந்து கண்டுபிடிப்பார். பிறகு எதிரிகளின் சதியை முறியடித்து பிரதமரை அவர்களது பிடியிலிருந்து விடுவித்து துணிச்சலான அதிகாரியாக இந்தப்படத்தில் அர்ஜுன் கெத்து காட்டியிருப்பார்.
தாயின் மணிக்கொடி: 1998 ஆம் ஆண்டு அர்ஜுன் எழுதி இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில் தபு அர்ஜுனுக்கு ஜோடியாக இணைந்திருப்பார். இதில் அர்ஜுன் விவேகமும் வீரமுள்ள போலீஸ் அதிகாரியாக செயல்பட்டு தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கி அவர்களது பிடியில் இருந்த கமிஷனர் குடும்பத்தையும் விடுவிப்பார்.
மருதமலை: சுராஜ் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திலும் அர்ஜுன் காவலர் தேர்வில் தேர்ச்சிப் பெற்று மூத்த அதிகாரியாக பணியில் அமர்த்தப்படுவர். இவருடைய காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் 16 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால், அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் தேர்தலை நடத்தி ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவார். இதில் இவருடைய துணிச்சலான செயலுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது.
குருதிப்புனல்: பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் கமலஹாசன் திரைக்கதை வசனம் எழுதிய இந்தப் படத்தில் கமலுடன் அர்ஜுன் இணைந்து நடித்திருப்பார். இதில் ஆதிநாராயணன் கேரக்டரில் கமல்ஹாசனும் அப்பாஸ் கதாபாத்திரத்தில் அர்ஜுனும் காவல்துறை அதிகாரியாக தீவிரவாத அமைப்பு ஒன்றை வேவு பார்ப்பதற்காக ரகசியமாக அனுப்பப்படுகின்றனர். இதில் அர்ஜுன் மற்றும் கமல் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். இருப்பினும் இதில் அர்ஜூன் கமலுக்கு பயங்கர டஃப் கொடுத்து நடித்திருப்பார்.
எனவே போலீஸ் வேடத்தில் எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும் அர்ஜுன் போலீஸ் கெட்டப்பில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த இந்த 6 படங்கள் இன்றும் ரசிகர்கள் ரசித்துப் பார்க்க வைத்திருக்கிறது.