புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025

டேனியல் பாலாஜியின் திடீர் மரணத்திற்கு இதுதான் காரணம்.. 48 வயதில் முடிந்து போன வாழ்க்கை

Daniel Balaji: இன்றைய பொழுது விடிந்தது திரைத்துறையில் ஏற்பட்ட ஒரு பெரிய பேரிழப்பு செய்தியை கேட்டு தான். நடிகர் டேனியல் பாலாஜி நள்ளிரவு 12 மணி அளவில் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார்.

விடிவதற்குள் அவருடைய உடல் திருவான்மியூரில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டது. இந்த செய்தியை கேட்டு கண்களை மூடி படுத்ததும் நமக்கு ஞாபகம் வருவது பொல்லாதவன் படம் தான்.

ஹீரோக்களுக்கு மட்டுமே பிளாஷ் பேக் என்றிருந்த ஒட்டுமொத்த சினிமா களத்தில் பொல்லாதவன் படத்தில் தான் முதன்முதலாக வில்லன் பிளாஷ்பேக் கதை சொல்லி இருப்பார். அண்ணன் மேல் அளவு கடந்த பாசம், ஒரு கட்டத்தில் தனுஷை கொல்ல வேண்டாம் என சொன்னதும் அண்ணனையே போட்டு தள்ளுவது எல்லாம் வேற ரகம்.

இந்த ஒரு படம் மட்டுமா டேனியல் பாலாஜியின் நடிப்புக்கு எடுத்துக்காட்டாகி விட முடியும்.வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் கேரக்டரை அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. சமீபத்தில் கூட இந்த படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இரண்டு சின்ன பசங்களுடன் இந்தப் படத்தில் உள்ள டேனியல் பாலாஜி வில்லனாக மிரட்டி இருப்பார். அது மட்டும் இல்லாமல் சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் அந்த நாலு போலீஸ்காரர்களில் ஒருவராக ஸ்ரீகாந்த் என்னும் கேரக்டரின் நடித்திருந்தார்.

சினிமா யூனிட்டில் வேலை செய்து கொண்டிருந்த இவர் நடிகை ராதிகா மூலம் சித்தி தொடரில் நடித்தார். அந்த சீரியலில் டேனியல் என்னும் கேரக்டரில் நடித்ததால் இவருடைய பாலாஜி என்னும் பெயர் அதன் பின்னர் டேனியல் பாலாஜியாக மாறியது.

48 வயதில் முடிந்து போன வாழ்க்கை

திடீரென ஏற்பட்ட தீவிர மாரடைப்பு தான் இவருடைய மரணத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது. திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் வீட்டிற்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் டேனியல் பாலாஜி.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டும், பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். நடிகர் டேனியல் பாலாஜி, நட்சத்திர நாயகன் முரளியின் நெருங்கிய உறவினர் என்பது எல்லோருக்கும் தெரியும். முரளியும் 50 வயதை தொட்டு இருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அதேபோன்று டேனியல் பாலாஜிக்கு 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

Trending News