60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த ஒரு நடிகர் முத்துராமன். தனது அசாத்திய நடிப்பால் நவரசத் திலகம் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முத்துராமன், 1981ஆம் ஆண்டு ஆயிரம் முத்தங்கள் என்ற பாட ஷூட்டிங்கிற்காக ஊட்டி சென்ற போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இவரது மகன் கார்த்திக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். தந்தைக்கு இணையாக நவரச நாயகன் என பெயர் பெற்றவர். தற்போது இவரது பேரன் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகனாக உள்ளார்.
இந்நிலையில், கௌதம் கார்த்திக் தனது தாத்தா முத்துராமின் பிறந்தநாளை ஒட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “நாங்கள் உங்களை பார்த்ததில்லை. ஆனால், உங்களுடன் வாழ்ந்தவர்கள் உங்களைப் பற்றி கூறுவதை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது.
ஒரு தன்மையான, அன்பான, கடின உழைப்பு, அதீத திறமையுடைய, அர்ப்பணிப்பு உணர்வுடைய உங்களின் பேரன் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஒருநாள் உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன் என நம்புகிறேன். ஹேப்பி பர்த் டே தாத்தா” என குறிப்பிட்டுள்ளார்.