வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ராஜ்கிரண்.. வரிசைகட்டி நிற்கும் படங்கள்

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் முரட்டு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ராஜ்கிரண். ஆரம்ப காலத்தில் ஒரு தயாரிப்பாளராக பல திரைப்படங்களை தயாரித்து வந்த இவர் காலப்போக்கில் ஒரு நடிகராகவும் மாறி திரையுலகில் தன் முத்திரையைப் பதித்தார்.

ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து இருக்கும் ராஜ்கிரண் சில காலங்களுக்குப் பிறகு குணசித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்த பா பாண்டி, சண்டக்கோழி உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெற்றி வாகை சூடியது.

கடந்த 2018ஆம் ஆண்டு இவர் சண்டைக்கோழி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இவர் நடிப்பில் தமிழில் எந்த திரைப்படங்களும் வெளிவரவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் ஒரு மலையாளத் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் தமிழில் எந்த திரைப்படங்களையும் இவர் கமிட் செய்யவில்லை.

தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு ராஜ்கிரண் இரண்டு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கார்த்தியின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் விருமன் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

இப்படம் வெளிவந்த பிறகு இவருடைய கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ராஜ்கிரண் கரு பழனியப்பன் இயக்கும் பாண்டியவம்சம் திரைப்படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருடன் இயக்குனர் அமீரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர மேலும் சில திரைப்படங்களில் நடிப்பதற்கும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜ்கிரண் தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறார். இனி ரசிகர்கள் அவருடைய கெத்தான நடிப்பை அடுத்தடுத்த திரைப்படங்களில் காணலாம்.

Trending News