ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

தெலுங்கில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த சத்யராஜ்.. கோடிகளில் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் தன்னுடைய நக்கலான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ். அவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

இவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராதே ஷ்யாம்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அதற்காக அவருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இந்த இரண்டு கோடி மட்டுமல்லாமல் அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அதை கொடுப்பதற்கு தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஏனென்றால் சத்யராஜுக்கு தெலுங்கில், தமிழைப் போலவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் தான்.

அந்த ஒரு கேரக்டர் அவருக்கு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய புகழைத் தேடி கொடுத்துள்ளது. அந்த படத்திற்கு பின்னர் சத்யராஜ் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குணச்சித்திர கேரக்டர் என்றால் அதில் சத்யராஜ் தான் நடிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பும் அளவிற்கு தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இதுதவிர ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திலும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தி திரையுலகில் தன் முத்திரையை பதித்துள்ளார். தற்போது இவர் தமிழில் பார்ட்டி, காக்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News