தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே. இவரது நடிப்பில் அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இவர் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள நெற்றிக்கண் படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நடிகர் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தில் வில்லனாக நடித்து பலரது பாராட்டை பெற்றவர். இறுதிவரை நண்பனாகவே இருந்து படத்தின் இறுதியில் வில்லனாக மாறி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். அந்த அளவிற்கு அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தற்போது மிலிந்த் ராஜூ இயக்கியுள்ள நெற்றிக்கண் படத்தில் நடித்தது குறித்து அஜ்மல் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சரியான படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று 3 ஆண்டுகளாக எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளமால் காத்திருந்தேன். மிலிந்த் கதை சொன்னதும் பிடித்துவிட்டது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் என படக்குழுவும் பிடித்ததால் ஒப்புக்கொண்டேன்.
கொரோனாவுக்கு முன்பு திட்டமிடப்பட்ட படம் இது. கொரோனா காரணமாக தள்ளிப்போய் இப்போது ஓடிடியில் வெளியாகிறது. இது ஒரு கொடூர வில்லன் வேடம். இந்த கதாபாத்திரத்திற்காக 3 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டேன். நயன் தாராவை ஏற்கனவே சிலமுறை சந்தித்திருக்கிறேன். இந்த படத்தில் அவருடன் நடித்தது மிக சிறந்த அனுபவம்.
படப்பிடிப்பு தளத்தில் நயன் தாரா, விக்னேஷ் சிவன், மிலிந்த் என எல்லோரும் ஒரு குழுவாக தான் வேலை பார்த்தோம். ஓடிடி என்பதை தவிர்க்க முடியாது. சூரரை போற்று, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களின் வெற்றி ஓடிடியின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார்.