தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி அருமையாக பாடவும் செய்வார்.
அந்நியன், வேட்டையாடு விளையாடு, துப்பாக்கி போன்ற பல படங்களில் அவர் பாடல்களை பாடியுள்ளார். மேலும் டாப்சி, இலியானா போன்ற நடிகைகளுக்கு திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதுதவிர ஆண்ட்ரியா இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.
பொதுவாக நடிகைகள் எல்லோரும் ஒரு படத்தில் நடிக்க விரும்பினால் முதலில் தேதி, சம்பளம் என்று அனைத்தையும் பேசி முடிவு செய்து விட்ட பிறகு தான் கதையைக் கேட்க ஆரம்பிப்பார்கள். ஆனால் ஆண்ட்ரியா அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளார்.
இயக்குனர் யாராவது அவரிடம் கதை சொல்ல அணுகினால் முதலில் கதை சுருக்கம் பற்றி தனக்கு அனுப்ப சொல்லுவாராம். அதை படித்த பிறகு கதை பிடித்திருந்தால் பிறகுதான் இயக்குனரை கதை சொல்லும்படி கேட்பாராம்.
இயக்குனர் சொல்லும் கதையும், கதையின் சுருக்கம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து ஒத்து வந்தால் பிறகுதான் நடிப்பதற்கு சம்மதிப்பாராம். அதன் பிறகே தேதி, சம்பளம் போன்ற மற்ற விஷயங்களை பற்றி பேசி முடிவெடுப்பாராம்.
இப்போதைய கதாநாயகிகள் எல்லாம் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்துவிட வேண்டும் என்பதற்காக வெறும் பாடல் காட்சிகளுக்கு வந்து செல்லும் கதாபாத்திரமாக இருந்தால் கூட நடிக்க சம்மதிக்கின்றனர். தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் வெகு சில நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். அதனால்தான் அவர் நடிப்பில் வெளியான வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.