மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த அழகிய நடிகை சமீபகாலமாக தயாரிப்பாளர்களிடம் சம்பள விஷயத்தில் மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
என்னதான் பெரிய படிப்பு படித்திருந்தாலும் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சின்னச்சின்ன நடன நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு பின்னர் மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சிறந்த காதல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் அந்த நடிகை.
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மொழி தெரியாத மாநிலங்களில் கூட வசூல் மழை பொழிந்தது. முதல் படத்திலேயே மவுசு கூடிய அந்த நடிகையை உடனடியாக அள்ளிக் கொண்டு சென்றது தெலுங்கு சினிமா.
தமிழில் ஒல்லி நடிகருடன் ஒரு விளங்காத படத்தில் நடித்தார் நாயகி. சோலோ ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் நடித்து பார்த்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு தமிழில் கைகொடுக்கவில்லை. அதற்கு மாறாக தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் நடிகையை சந்தித்து கதை கூறினாராம். கதை பிடித்துப்போன நாயகி உடனடியாக தன்னுடைய சம்பளம் இரண்டு கோடி என கையை காட்டி உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இயக்குனர் இந்த சூழ்நிலையில் இஷ்டத்திற்கு சம்பளத்தை ஏற்றினால் எப்படி என பவ்யமாக கேட்டுள்ளார்.
ஆனால் நடிகை கொஞ்சமும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. நீங்கள் சொல்லும் அனைத்து காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடித்து கொடுக்கிறேன், ஆனால் சம்பளத்தில் மட்டும் குறைக்கச் சொன்னால் எப்படி என எதிர் கேள்வி கேட்கிறாராம். இதனால் மனம் நொந்து போன அந்த இயக்குனர் கிடைத்த பட வாய்ப்பும் வீணாக போய் விட்டதே என்று தலையில் அடித்துக் கொண்டே வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டாராம்.