விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே டிஆர்பியில் முன்னிலை பெற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஒரே நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் பெரிய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். அதில் மனோபாலா, வித்யூலேகா, ரோஷினி, சந்தோஷ் பிரதாப், ஆண்டனி தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடிகை ஸ்ருதிகாவும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இவர் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து ஆல்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ருதிகா பின்னர் படவாய்ப்புகள் சரியாக அமையாததால் நடிப்புக்கு முழுக்கு போட்டார். இவர் சினிமாவில் 70 காலகட்டங்களில் பிரபலமாக இருந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார்.
தற்போது பல வருடங்களுக்குப் பின்னர் அவர் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளை அசரடிக்கும் அசத்தலான சிரிப்பில் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஸ்ருதிகா அனைவரிடமும் மிகவும் கலகலப்பாக பேசினார்.
மேலும் அவர் நான் நடித்த நான்கு படங்களும் பிளாப் ஆயிடுச்சு, என் தாத்தாவின் பெயரை நான் காப்பாற்றவில்லை என்று சிரித்துக்கொண்டே கூறினார். முதல் முறையாக ஒரு வெற்றி பெற்ற நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
அவருடைய இந்த எதார்த்தமான பேச்சும், சிரித்த முகமும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இதனால் நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரே நாளில் ஸ்ருதிகா ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
மேலும் பார்ப்பதற்கு இளமையாக இருக்கும் அவருக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் பல தோல்விகளை சந்தித்த அவருக்கு இந்த நிகழ்ச்சி ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது ரசிகர்கள் இவரை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.