புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கடைசி வரை நிறைவேறாத சில்க்கின் ஆசை.. கவனிக்க தவறிய தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு கவர்ச்சி நடிகைக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்களா என்று அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகை சில்க் ஸ்மிதா. போதையேற்றும் அவரின் ஒற்றை பார்வைக்கு பல ரசிகர்களும் அடிமையாக இருந்தார்கள்.

80 காலகட்ட சினிமாவையே தன் கைக்குள் வைத்திருந்த அவர் ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் அவரின் டான்ஸ் இல்லாத படங்களே கிடையாது. அவருடைய பாடலுக்காகவே வெற்றி பெற்ற பல திரைப் படங்களும் உண்டு.

ஏராளமான கவர்ச்சி கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் தன் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஆவது நடித்துவிட வேண்டும் என்பதே சில்க்கின் ஆசையாக இருந்தது. ஆனால் இவரை தங்கள் படத்தில் புக் செய்த இயக்குனர்கள் பலரும் ஜெயமாலினி, ஜோதிலட்சுமி போன்ற நடிகைகளை போல் தான் நீங்களும் என்று அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனாலும் சாவித்திரி போன்று குடும்ப பாங்காக நடிக்க வேண்டும் என்பது அவரின் தீராத ஆசையாக இருந்தது. சில்க்கின் அந்த ஆசையை ஓரளவுக்கு நிறைவேற்றியவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடிகை சில்க் ஸ்மிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஒரு தைரியமான பெண்ணாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த படம் முழுக்க அவர் புடவை கட்டிக்கொண்டு மிகவும் குடும்ப பாங்காக நடித்திருந்தார். அவருக்கு அதன் பிறகு அப்படி ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

ஒருபுறம் இளைஞர்கள் இருவரை கொண்டாடி வந்தாலும், பல இல்லத்தரசிகளின் வெறுப்புக்கும் அவர் ஆளானார். வெட்கமில்லாமல் இப்படி நடிக்கிறா என்று பலரும் இவரை விமர்சித்தனர். இருப்பினும் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்த அவரை தமிழ் சினிமா கவர்ச்சிக்கு என்று தனி முத்திரை குத்தி விட்டது தான் பெரும் சோகம்.

இப்படி சினிமாவில் அவர் ஆசைப்பட்ட ஒரு கதாபாத்திரம் அவருக்கு கடைசி வரை கிடைக்கவில்லை. சினிமாவில் பல உயரங்களை அடைந்த அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட துரோகத்தினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு இன்றுவரை தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது

Trending News