தற்போது மிகவும் பிஸியாக வலம் வரும் தமிழ் நடிகரான விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அதற்கேற்றார் போல் மற்ற மொழிகளில் இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
வழக்கமான கதைகளில் இருந்து சற்று வித்தியாசமான அல்லது மாறுபட்ட கதைகளையே தேர்ந்தெடுக்கும் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் ஒரு மாறுபட்ட கதையை தேர்வு செய்துள்ளார். காந்தி டாக்ஸ் என்ற மௌன படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது பட வேலைகள் தீவிரமாகி உள்ளன.
கமல்ஹாசன் நடித்து 1987ஆம் ஆண்டு ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான புஷ்பக விமானா படமே கடைசியாக வந்த மௌன படமாகும். இப்படத்தை தமிழில் பேசும் படம் என்ற பெயரில் வெளியிட்டனர். தற்போது சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி டாக்ஸ் மவுன படம் உருவாகிறது.
ஹிந்தியில் தயாராகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். கிஷோர் பாண்டுரங் பலேகர் இப்படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை படம் மூலம் அறிமுகமான நடிகை அதிதிராவ் நடிக்க உள்ளார்.
விஜய்சேதுபதி ஏற்கனவே மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைக்கார் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகும் ஹிந்தி வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க உள்ளார். தற்போது காந்தி டாக்ஸ் படமும் தொடங்கி உள்ளது. எனவே அடுத்தடுத்து பாலிவுட் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறார்.