ஊரடங்கில் சிக்கிய பல திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட முடியாததால் நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியிட்டு வந்தனர். சன் டிவி நிறுவனம் தான் அதை முதல் முதலாக ஆரம்பித்தது. தீபாவளிக்கு நாங்க ரொம்ப பிஸி படத்தையும், பொங்கலுக்கு புலிக்குத்தி பாண்டி படத்தையும் வெளியிட்டது.
தற்போது ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஜிவி பிரகாஷ் மற்றும் அம்ரிதா ஐயர் நடிக்கும் வணக்கம்டா மாப்ள என்ற படத்தை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் டிவியும் நேரடியாக படத்தை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா என்ற பெண் இயக்குனரின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் நேரடியாக விஜய் டிவியில் வெளியான திரைப்படம் தான் ஏலே. எதார்த்தமான திரைக்கதையில் அமைந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தை விஜய் டிவி நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது. காமெடியனாக கலக்கி கொண்டிருக்கும் யோகி பாபு கதையின் நாயகனாக சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படி யோகி பாபு ஹீரோவாக நடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் மண்டேலா.
இந்த படத்தையும் ஏலே படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தான் தயாரித்துள்ளார். ஜகமே தந்திரம் படத்தால் தியேட்டர்காரர்களுக்கும் இவருக்கும் பஞ்சாயத்து ஏற்பட்ட நிலையில் தற்போது தான் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களை நேரடியாக டிவியில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் சசிகாந்த்.
மேலும் மண்டேலா திரைப்படம் மார்ச் மாத இறுதியில் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு நேரடியாக விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மண்டேலா படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.