தெலுங்கு படங்களின் மூலம் தன்னுடைய இயக்குனர் வேட்டையை தொடங்கிய சிறுத்தை சிவா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திட்டமிட்டபடி நடக்காத ஒரே திரைப்படம் என்றால் அது அண்ணாத்த படம் நான்.
ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சமீபத்தில் தொடங்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. தற்போது வரை அடுத்தகட்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போது என்பது இன்னும் படக்குழுவினருக்கு தெரியவில்லையாம்.
இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என அண்ணாத்த படத்தின் அடுத்த வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு தன்னுடைய அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளாராம் சிறுத்தை சிவா. அந்தவகையில் அடுத்ததாக ஏற்கனவே ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவின் 39வது படத்தை இயக்கயிருந்தார் சிறுத்தை சிவா.
அதற்குள் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் அந்த படத்தை கைவிட்டார். தற்போது மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து அந்த படத்தை தொடங்க உள்ளாராம். பக்கா கிராமத்து கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறதாம். வேல் படத்திற்கு பிறகு சூர்யாவின் சினிமா கரியரில் சிறுத்தை சிவாவின் இந்த கிராமத்து திரைப்படம் ஒரு முத்திரையைப் பதிக்கும் என்கிறார்கள் சூர்யா வட்டாரத்தினர்.
இப்போதைக்கு சூர்யா படத்திற்கான மொத்த வேலைகளையும் முடித்து வைக்கலாம் என திட்டமிட்டுள்ளாராம். பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தொடர்ந்து சூர்யாவின் படத்தில் இடைவேளை இல்லாமல் பணியாற்ற உள்ளாராம் சிறுத்தை சிவா.

இதற்கிடையில் தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம் ஆகிய இருவருக்கும் தனித்தனியாக கதை கூறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏன் தளபதி 66 படத்தின் இயக்குனர் கூட சிறுத்தை சிவா தான் என்கிற செய்தியும் வெளியானது மறுக்க முடியாத ஒன்று.
எது எப்படியோ, சிறுத்தை சிவாவின் காட்டில் இன்னும் சில வருடங்களுக்கு அடை மழைதான்!