ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

சென்னையை அதிமுக கைப்பற்றுவது உறுதி.. அடித்துக் கூறும் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழகத்தில் இன்னும் இரு நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதேபோல் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களமும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

அதாவது சென்னை மாவட்டத்தில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெறும் என்ற தொகுதிகளும் உள்ளன. குறிப்பாக ராயபுரம், ஆர்கேநகர் போன்ற தொகுதிகளில் வாழையடி வாழையாக அதிமுக வெற்றி பெற்று வருகிறது. அதே போல் திமுக கொளத்தூர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றிவாகை சூடுவது வழக்கம். எனவே சென்னையில் திமுக வெற்றி பெறும் தொகுதிகள் அதிகமாக இருப்பதால் சென்னை எங்கள் கோட்டை என்று திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த கூற்றை தவிடுபொடியாக்கும் வகையில் இம்முறை அதிமுக சென்னையில் 9 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஆர்கே நகர், அண்ணாநகர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, டி நகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் ராயபுரம் தொகுதியின் வேட்பாளரான அமைச்சர் ஜெயக்குமார் தொகுதி மக்களுக்கு நன்கு அறிந்தவராகவும், அமைச்சராகவும் தொடர்ந்து இருப்பதால் அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேபோல் ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி ஆகும். அதிமுக வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பதால் இந்த தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி.

மறுபுறம் அண்ணாநகரில் கோகிலஇந்திரா என்பவர் ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஜேசிடி பிரபாகர் தொகுதிக்கு நன்கு அறிமுகமான நபர் ஆவார். விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளரான ரவி தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதேபோல் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை செய்து அதன் அடிப்படையில் ரவி வெற்றி பெறுவார் என்று தெரிகிறது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சைதை துரைசாமி தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் மட்டுமல்லாமல் கட்சியை தாண்டி சமூக பணிகள் பலவற்றை மேற்கொண்டு வருவதால் மக்கள் அவருக்கு பெரும்பான்மையான ஆதரவைத் தெரிவித்து வருகின்றனராம்.

மேலும் டி.நகர் தொகுதியின் வேட்பாளரான சத்யநாராயணா தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் செய்த பணிகளின் அடிப்படையில் அவர் வாக்குகளை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஆர் நடராஜன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதோடு, நேர்மையானவர் என்பதால் மக்களின் செல்வாக்கு அவருக்கு அதிகமாக இருக்கிறது.

அதேபோல் வேளச்சேரி தொகுதி வேட்பாளரான அசோக் ஏற்கனவே போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் தொகுதி மக்கள் அனைவருக்கும் தெரிந்தவராக இருப்பது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் இழுபறி நிலை நீடிப்பதாகவும், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர், எழும்பூர், துறைமுகம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அவ்வாறு வெற்றிபெற்றால் அதிமுக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News