தமிழ் சினிமாவில் சிறு,சிறு கேரக்டரில் நடித்து அதன்பின் நாயகியாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே தைரியமாக ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல், இந்த படம் தேசிய விருது பெற்றது. படத்தில் நடித்த சிறுவர்கள் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.
நாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை , சாமி 2, மனிதன், செக்க சிவந்த வானம் ஆகிய படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்திருந்தார். வடசென்னை படத்தில், அந்த கேரக்டரில் பக்காவாக பொருந்தி நடித்து அனைவரிடமும் பாராட்டை பெற்றார்.
சில தினங்களுக்கு முன் இவர் நடித்திருந்த ‘திட்டம் இரண்டு’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து ரவீந்திர பிரசாத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள “பூமிகா” திரைப்படம் நாளை விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்தப்படம் குறித்து சமீபத்தில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‘இந்தப்படத்திலும் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறேன், இதுமாதிரியான படங்களில் அதிகமாக நடித்த நடிகை நானாகத்தான் இருப்பேன். இதைப்பற்றி எனக்கு எந்த கவலையோ, வருத்தமோ இல்லை. எனக்கு கதைதான் முக்கியம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த படத்தை பார்த்தபின் ஒவ்வொருவரும் கண்டிப்பாக குறைந்தபட்சம் ஒரு செடியையாவது நட்டுவைக்கவேண்டும் என எண்ணுவார்கள்’ என்றார்.