தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் விரைவில் தியேட்டரில் வெளிவர இருக்கிறது.
இதையடுத்து போனிகபூர், எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளார். இந்த திரைப்படம் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாகும். இதில் அண்ணன், தம்பி என்ற இரு வேடங்களில் அஜித் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.
அதிலும் அவர் காது மற்றும் வாய் பேச முடியாத அண்ணன் கேரக்டரில் வில்லத்தனம் கலந்து மிரட்டியிருப்பார். இப்படம் வெளியான போது அஜித்தின் இந்த மாறுபட்ட நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்காக அவர் பல விருதுகளையும் பெற்றார்.
தற்போது அஜித்தின் படங்களை தயாரித்து வரும் போனிகபூர் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்ய மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். முறைப்படி ஒரு படத்தை டப்பிங் செய்வதற்கு எந்த தடையும் இருப்பதில்லை. ஆனால் அதே படத்தை ரீமேக் செய்ய வேண்டுமென்றால் சில விதிமுறைகள் இருக்கிறது.
அதாவது ஒரு படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்தால் அந்தப் படத்தின் இயக்குனருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். இதனால் வாலி திரைப்படத்தின் இயக்குனர் எஸ் ஜே சூர்யா தனக்கு அதில் 40 சதவீதம் பங்கு தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
ஆனால் துரதிஷ்டவசமாக நீதிமன்றம் இந்த ரீமேக்கிற்கு பணம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதில் தனக்கு பங்கு கிடைக்கும் என்று மிகவும் நம்பியிருந்த எஸ் ஜே சூர்யா நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.
அஜித்துக்கு மிகப் பெரிய புகழை ஏற்படுத்திக் கொடுத்த இந்த திரைப்படம் ரீமேக் ஆகும் பட்சத்தில் அவர் நடித்த கேரக்டரில் யார் நடிப்பார் என்ற ஆவல் அனைவரிடமும் உள்ளது. இருப்பினும் அந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் அஜீத் மட்டும் தான் என்று அவரது ரசிகர்கள் மிகவும் பெருமையுடன் கூறி வருகின்றனர்.