தற்போது தமிழ் சினிமாவில் தல என்ற அடைமொழியுடன் வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் வாலி. இப்படத்தில் அஜித் முதன் முறையாக இரட்டை வேடத்திலும், அதேபோல் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.
அஜித், சிம்ரன், விவேக் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான வாலி படம் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கிய முதல் படமாகும். அஜித்தின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. தேவா இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டுமின்றி விமர்சன ரீதியிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாலி படம் குறித்த சுவாரஸ்ய தகவலை இயக்குனர் எஸ்.ஜே சூர்யா தற்போது தெரிவித்துள்ளார். அதாவது சிம்ரன் நடித்த கேரக்டரில் முதலில் கீர்த்தி ரெட்டி தான் நடிக்க இருந்தாராம். கீர்த்தி ரெட்டியை ஒப்பந்தம் செய்து ஒரு நாள் படப்பிடிப்பு கூட நடைபெற்றதாம்.
ஆனால் அந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இல்லை என்பதால், உடனடியாக சிம்ரனை நடிக்க வைத்துள்ளனர். தமிழில் தேவதை என்ற படம் மூலம் அறிமுகமான கீர்த்தி ரெட்டி இனியவளே, நினைவிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை.
வாலி படத்தில் அஜித் நடிப்பை தாண்டி சிம்ரனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. நடனம் மட்டுமின்றி சிம்ரனின் முகபாவனைகளும் படத்திற்கு சிறப்பம்சமாக அமைந்திருந்தது. எனவே வாலி படத்தில் கீர்த்தி ரெட்டி நடிக்காமல் இருந்ததே நல்லது என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.