தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் வெங்கட்பிரபு முதலில் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன்பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு இவர் இயக்கிய சென்னை 28 படம் மாபெரும் வெற்றி பெற்றது. இளைஞர்களை கவரும் விதமாக இப்படம் அமைந்திருந்ததால் வெங்கட்பிரபு எளிதில் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.
அனைவருக்கும் பிடித்த விளையாட்டான கிரிக்கெட்டிற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே வெங்கட்பிரபு இரு அணி இளைஞர்களுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டான கிரிக்கெட்டை காமெடி கலந்த படமாக வழங்கியிருந்ததால் இளைஞர்கள் இப்படத்தை ரசித்தனர்.
இதையடுத்து இவர் இயக்கிய சரோஜா, மங்காத்தா ஆகிய படங்கள் அவரை முன்னணி இயக்குனர்கள் பட்டியலில்இணைத்தது. அதிலும் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
தற்போது வெங்கட் பிரபு, சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ளார். சிம்பு மற்றும் வெங்கட் பிரபு முதல் முறையாக இணைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தில் சிம்புவின் கெட்டப்பும் புதிதாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் வெங்கட்பிரபு அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டாரான கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் இப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நான் ஈ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சுதீப் என்பது குறிப்பிடத்தக்கது.