தேசிய விருது இயக்குனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஜித்.. மாஸ் கூட்டணியில் AK-63

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து தான் அஜித்தின் வலிமை படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் அஜித் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

தற்போது மூன்றாவது முறையாக வினோத், போனிகபூர் கூட்டணியில் ஏகே 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவுற்றது. இதுதொடர்ந்து அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் ஏகே 62 படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். மேலும் அனிருத் இசையமைக்கவுள்ளார். தற்போது அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து உள்ளது.

அதாவது சூரரைப்போற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. கடந்த 2020ஆம் ஆண்டு சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்த சூரரைப்போற்று படம் ஓடிடியில் வெளியானது.

ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சூரரைப்போற்று படம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இப்படத்தில் நடித்ததற்காக சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்தில் இசையமைத்த ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அஜித்தின் 63 அல்லது 64 ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கயுள்ளார். இதனால் 2 தேசிய விருது பிரபலங்களுடன் அஜித் அடுத்த படத்தில் இணையுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.