AK63 Update: நடிகர் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்காக மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்து விட்டது போல் தெரிகிறது. முன்பெல்லாம் ஒரு படம் நடித்து முடிக்கும் வரை அடுத்த படத்தை பற்றி அஜித் யோசிக்கவே மாட்டார். அப்படி இருக்கும் பொழுது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த ஒரு சில வாரத்திலேயே அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். த்ரிஷா, பிரியா பவானி சங்கர், சஞ்சய் தத், பிக் பாஸ் ஆரவ் ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது. மொத்த பட குழுவும் தற்போது துபாயில் தஞ்சம் அடைந்திருக்கும் நேரத்தில் ஏகே 63 படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாகவே இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார். அவருடைய இந்த புதிய ரூட் ஒர்க் அவுட் ஆகி ஜெயிலர் படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு வந்துவிட்டது. இப்போது ரஜினியின் ரூட்டை தான் கையில் எடுத்திருக்கிறார் அஜித். தன்னுடைய 63வது படத்திற்கும் இளம் இயக்குனர் ஒருவருடன் கைகோர்த்து இருக்கிறார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்த மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆசிக் ரவிச்சந்திரன் தான் அடுத்து நடிகர் அஜித்தை இயக்க இருப்பது. வெற்றிப்பட இயக்குனர் என்பதை தாண்டி இவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதை ஒவ்வொரு மேடையிலும் நிரூபித்து இருக்கிறார். தன்னுடைய மார்க் ஆண்டனி படத்திலும் அஜித்தை பற்றி காட்சி வைத்திருக்கிறார்.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். இப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பே அவருக்கு கிடைத்திருக்கிறது. ரஜினி மற்றும் கமலை அவருடைய ஃபேன் பாய் இயக்குனர்கள் இயக்கியது போல் இப்போது அஜித்திற்கும் அமைந்திருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு அவருக்கு 175 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம்.
இனி அரைத்த மாவையே அறைத்தால் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்டு இளம் இயக்குனர்களின் சரக்கை எப்படி ரஜினிகாந்த் உபயோகப்படுத்திக் கொண்டு நம்பர் ஒன் இடத்தை மீண்டும் தக்க வைத்தாரோ அதே ரூட்டைத் தான் அஜித் இப்போது கையில் எடுத்திருக்கிறார். கண்டிப்பாக இந்த கூட்டணியில் உருவாகும் படம் அஜித்திற்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைய வாய்ப்புகள் அதிகம்.