கிராமத்து படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது இயக்குனர் பாரதிராஜா மட்டுமே. இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் நம்மை உணர்ச்சிகரமாக மாற்றும். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமான கதையை நமக்கு கொடுத்தவர்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை போன்ற ஒவ்வொரு படமும் நம் நினைவை விட்டு நீங்காதவை. தமிழ் சினிமாவில் இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலருக்கும் ஒரு அடையாளத்தை தந்தது இவருடைய படங்கள் மட்டுமே.
அந்த வரிசையில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் கார்த்திக், நடிகை ராதாவுடன் இணைந்து அறிமுகமானார். இந்தப் படம் முழுக்க முழுக்க காதலை பற்றி கூறிய படமாகும்.
அதனால் இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் பல இருந்தது. ஆனால் புதிய முகமாக இருந்த கார்த்திக் மற்றும் ராதா இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்த பாரதிராஜா இருவரையும் ஒன்றாக நெருங்கி பழக விட்டாராம்.
அதன் பின்னர் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்தது. அதன் பிறகு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று கார்த்திக், ராதா இருவருக்கும் ஒரு அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்திற்கு பின்னர் கார்த்திக், ராதா இருவரும் ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்.
திரையில் அவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்று ரசிகர்கள் இவர்களை கொண்டாடினர். இதனால் இவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலித்ததாகவும், சில காரணங்களால் தங்கள் காதலை முறித்துக் கொண்டு பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
பல வருடங்களுக்குப் பின்னர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும், ராதாவின் மகள் துளசி இருவரும் இணைந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடல் என்ற திரைப்படத்தில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.