தமிழில் மைனா படம் மூலம் பிரபலமான நடிகை அமலாபால் தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, ராட்சசன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் ஆடை.
இப்படத்தில் இவர் நிர்வாணமாக நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், அமலாபால் நடித்துள்ள தெலுங்கு வெப் தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
சமந்தா நடிப்பில் வெளியான யூ டர்ன் படத்தை இயக்கிய பவன்குமார் இத்தொடரை இயக்கியுள்ளார். இதில் ராகுல் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடரில் அமலாபால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். குடியெடமைதே என பெயரிட்டுள்ள இத்தொடருக்கு ராம் விக்னேஷ் கதை எழுதியுள்ளார்.
பல திடுக்கிடும் திருப்பங்களை கொண்ட இத்தொடர் இதுவரை தெலுங்கு ரசிகர்கள் பார்த்திராத திகில் தொடராக இருக்கும் என்றும், போலீஸ் அதிகாரிக்கும் டெலிவரி பாய்க்கும் இடையே நடக்கும் கதை எனவும் இயக்குனர் பவன் குமார் கூறியுள்ளார்.
ஏற்கனவே அமலாபால் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்து, நடித்துள்ள கடாவர் திரைப்படம் எப்போது வெளிவரும் என தெரியவில்லை. அதேபோல் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள அதோ அந்த பறவை போல படமும் பணப் பிரச்சினையால் தற்போது வரை திரைக்கு வரவில்லை.

இந்த நிலையில், அமலாபாலின் இந்த வெப் தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.