தைப்பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் அமேசான் தளத்திற்கு இரண்டு முறை விற்று நல்ல லாபம் பார்த்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. நீண்ட நாட்களாகவே மக்கள் சாதாரணமாக தியேட்டர்களுக்கு வருவார்களா? மாட்டார்களா? என்ற சந்தேகத்தில் தான் தியேட்டர்காரர்கள் இருந்து வந்தனர்.
ஆனால் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் அதை மாற்றி விட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி படையெடுத்து விட்டார்கள். இதனால் அனைத்து திரையரங்குகளும் நல்ல லாபம் பார்த்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தயாரிப்பாளருக்கு முறையாக கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் சில இடங்களில் வேண்டுமென்றே நஷ்டக் கணக்கு காட்டியதாகவும் தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர், அமேசான் தளத்திற்கு தியேட்டர்காரர்களின் ஒப்பந்தத்தையும் மீறி விற்றுவிட்டாராம்.
முன்னதாக தியேட்டரில் ஒரு படம் வெளியானால் அடுத்த 30 நாட்கள் கழித்து தான் OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் மாஸ்டர் படம் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் வெளியானது.
முன்னதாக மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்றார்களாம்.ஆனால் வெளிநாடுகளில் சில பகுதிகளில் மாஸ்டர் படம் வெளியாகாததை அறிந்துகொண்ட அமேசான் நிறுவனம் பேசிய பணத்தை விட அதிகமாக கொடுத்து குறிப்பிட்ட நாளைக்கு முன்னாடியே மாஸ்டர் படத்தை வெளியிட அனுமதி வாங்கி வெளியிட்டனர். கிட்டத்தட்ட 36 கோடி முதல் 40 கோடி வரை விலைகொடுத்துள்ளனர்.
இதன் மூலம் தயாரிப்பாளருக்கு நல்ல வருமானம் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள். இருந்தாலும் வார இறுதி நாட்களில் மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் OTT தளத்திலும் தியேட்டரிலும் மாஸ் காட்டி வருகிறது மாஸ்டர் என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.