Tamilisai Soundarrajan: ‘ யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்று கண்ணதாசன் தன்னுடைய பாடல் வரிகளில் சொல்லி இருப்பார். இது மனித வாழ்க்கையில் நிதர்சனமான உண்மை. தமிழிசை சௌந்தரராஜன் போன்ற ஒரு சிங்கப்பெண் மற்ற கட்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக உயர உயர பறந்து இருப்பார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் பாஜக கட்சி தமிழிசையை வெறும் துருப்பு சீட்டாக மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் பாஜகவுக்கு எந்த வாய்ப்பும் வராது என தெரிந்திருந்தும் பல வருடங்களாக அந்த கட்சிக்காக போராடியவர் தமிழிசை.
அவருக்கு தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் ஆளுநர் பதவி கொடுத்தபோது உண்மையாகவே தமிழர்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். ஆனால் பாஜகவின் நிறைவேறாத கனவுக்காக அவரே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யச் செய்து தேர்தலில் நிற்க வைத்து இப்போது ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கிறது அந்த அரசு.
கடும் கண்டனத்தை தெரிவிக்கும் இணையவாசிகள்
பாஜக கட்சி தோல்வியை தழுவிய நிலையில் தமிழிசை நேரடியாகவே கட்சித் தலைமையை சாடி இருந்தார். அண்ணாமலையால் தான் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பது தமிழ்நாட்டில் சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடும்.
அதைத்தான் தமிழிசையும் வெளிப்படையாக சொன்னார். இதனால் தமிழக பாஜக கட்சியில் உட்கட்சி பூசல் ஆரம்பித்துவிட்டது. மோடி பதவியேற்பதற்கு முன்பே அண்ணாமலை டெல்லி பறந்தது எல்லோருக்கும் தெரியும்.
இது போதாது என்று ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பாஜக கட்சியை சேர்ந்த எல்லோரும் கலந்து கொண்டார்கள். அந்த மேடையில் தமிழிசை இருந்த பெரிய தலைவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அமித்ஷா அவரை ஒரு திமிரான தோணியில் கூப்பிட்டு கடிந்து பேசினார். தமிழிசை பணிவாக பதில் சொல்லியும் அமித்ஷா அவரை பேச விடாமல் விரலை ஆட்டி ரொம்பவும் கோபமாக பேசி இருந்தார். அதை தொடர்ந்து விமான நிலையம் வந்த தமிழிசை இடம் அந்த சம்பவம் பற்றி கேட்கப்பட்டது.
எப்போதுமே பத்திரிக்கையாளர்கள் கேட்கும் எல்லா கேள்விக்கும் பொறுமையாக பதில் சொல்லும் தமிழிசை இந்த முறை எந்த பதிலும் சொல்லாமல் போய்விட்டார். இதிலிருந்து அமித்ஷா தமிழிசை இடம் என்ன சொல்லி இருப்பார் என்று யூகிக்க முடிகிறது.
தமிழ்நாட்டில் சிங்கம் போல் கர்ஜித்து கொண்டிருக்கும் தமிழிசையை பாஜக கட்சி இப்படி கையால்வது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தற்போது இது ஒரு ஜாதி பிரச்சனையாகவும் மாறிவிட்டது.
தமிழிசை சௌந்தர்ராஜன் பிரபல அரசியல்வாதி குமரி ஆனந்தனின் மகள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர். அந்த சமூகத்தினர் தற்போது அமித்ஷாவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டி கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் இப்படி நடத்தும் கட்சியிலிருந்து தயவு செய்து வெளியில் வந்து விடுங்கள் என தமிழ் இசைக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். எதிர்க்கட்சியான காங்கிரசும் அமித்ஷாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.