இசையமைப்பாளராக வலம் வந்த ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு படம் மூலம் ஹீரோவாக களத்தில் இறங்கினார். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவிற்கு சுமாரான வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் தியேட்டரில் வெளியான சிவகுமாரின் சபதம் படம் வெற்றி பெறவில்லை.
அதனால் தானோ என்னவோ இவரின் அடுத்த படமான அன்பறிவு படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி அறிமுக இயக்குனர் அஷ்வின் ராம் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள அன்பறிவு படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்று பார்க்கலாம்.

கதைப்படி இரட்டையர்களான அன்பு மற்றும் அறிவு ஆகிய இருவரும் தனித்தனியாக வாழ்கிறார்கள். அன்பு அவரது தாய் ஆஷா சரத் மற்றும் தாத்தா நெப்போலியனுடன் கிராமத்தில் வசிக்கிறார். மிகவும் கோபக்காரனான குணத்துடன் அன்பு காணப்படுகிறான். இவருக்கு அப்படியே எதிர்மறையாக மிகவும் படித்த புத்திசாலியான அறிவு கனடாவில் அவரது தந்தை சாய் பிரகாஷுடன் வசித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் தனக்கு கிராமத்தில் ஒரு குடும்பம் இருப்பதை அறிந்த அறிவு 25 ஆண்டுகளுக்கு பின்னர் கிராமத்திற்கு வந்து இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை காமெடி, எமோஷன், காதல் என அனைத்தும் கலந்து ஒரு பேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக வழங்கி உள்ளனர்.

கேரக்டர்கள் தேர்வு நடிகர்களின் நடிப்பு என அனைத்தும் நன்றாகவே உள்ளது. டிவிட்டரிலும் கருத்துகள் ஓரளவிற்கு கலவையாகவே கிடைத்து வருகிறது. ஆனால் கதை தான் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு கதையாக உள்ளது. இதை பார்க்கும்போது கிட்டத்தட்ட சூர்யா நடிப்பில் வெளியான வேல் படத்தை போலவே உள்ளது. டிரைலர் வெளியான சமயத்திலேயே இந்த விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது படம் பார்த்த பலரும் அதை தான் கூறுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் யோசிக்காமல் படத்தை பார்த்தால் ஒரு பக்கா பேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும்.