சீனு ராமசாமி இயக்கத்தில் கிராமத்து கதையை மையமாகக்கொண்டு 2010 ஆம் ஆண்டு வெளியான படம் “தென்மேற்கு பருவக்காற்று”. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தார். அவரது இயல்பான அந்த நடிப்பிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்ற “கள்ளிக்காட்டு பிறந்த தாயே” என்ற பாடலுக்காக வைரமுத்துவுக்கும் தேசிய விருது கிடைத்தது.
அதன்பின்னர் மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை படத்திலும் நடித்திருந்தார். அதிலும் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டை பெற்றார்.
தர்மதுரை, கண்ணே கலைமானே படங்களைத்தொடர்ந்து சீனு ராமசாமி தற்போது ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ‘இடிமுழக்கம்’ எனும் படத்தி இயக்கி வருகிறார். சமீபத்தி இப்படத்தின் போஸ்டர் வெளியானது. இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இதில் அம்மா வேடத்தில் நடிப்பதற்காக சரண்யா பொன்வண்ணன் ஒப்பந்தமாகியுள்ளார்.
தொடர்ந்து கிராமாத்து கதையை பின்னணியாக கொண்ட படங்களை இயக்கிவரும் சீனு ராமசாமி இந்தப்படத்தையும் அப்படியே எடுக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது திகில் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
சரண்யா பொன்வண்ணன் – சீனுராமசாமி வெற்றிக்கூட்டணி மீண்டும் அமைந்துள்ளதால், இந்த முறையும் சரண்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறிக்கொள்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.