திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சர்க்கார் படத்திற்கு பின் சரிவை சந்தித்த ஏஆர் முருகதாஸ்.. தற்போதுவரை மீள முடியாத சோகம்

தமிழ் சினிமாவில் படங்களுக்கு வசனம் எழுதுவதன் மூலம் தன் பயணத்தை தொடங்கி தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அஜீத் குமாரை வைத்து படம் இயக்கி அதில் வெற்றியும் பெற்றார்.

இந்த படத்தின் மூலம் தான் அஜித்குமாருக்கு தல என்று பெயர் வந்தது. இந்த படத்தை பார்த்து மிகவும் பிடித்துப் போன கேப்டன் விஜயகாந்த் முருகதாஸுடன் ஒரு படம் பண்ணுவதற்கு ஆசைப்பட்டுள்ளார். அதன்பிறகு விஜயகாந்த் நடிப்பில் ரமணா படம் உருவானது. அந்த படம் விஜயகாந்துக்கு சினிமாவில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் கஜினி திரைப்படம் வெளியானது. மிகவும் புதுமையான கதை களத்தை கொண்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின்பு தளபதி விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி போன்ற திரைப்படங்களை ஏ ஆர் முருகதாஸ் இயக்கினார்.

ஏ ஆர் முருகதாஸ், விஜய் கூட்டணி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்ததால் அடுத்து சர்க்கார் படத்திலும் இணைந்தார்கள். ஆனால் அங்குதான் பிரச்சினையே ஆரம்பமானது. சர்க்கார் திரைப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குனர் ஒருவர் நடிகர் சங்கத்தில் முறையிட்டார்.

இதனால் பரபரப்பான நடிகர் சங்கம் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் விசாரணையை ஆரம்பித்தது. பாக்யராஜ் மிகவும் பொறுமையாக விசாரித்து கதை திருடப்பட்டது உண்மைதான் என்று கண்டுபிடித்தார். இதனால் சர்க்கார் படம் திரையிடுவதில் பல சர்ச்சைகள் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் ஏ ஆர் முருகதாஸ் கொஞ்சம் இறங்கி போய் இருந்தால் பல பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் அவருக்கு இருந்த நல்ல பெயர் கெட்டுப் போனது.

மேலும் அவர் ஒரு காப்பி பட இயக்குனர் என்று முத்திரை குத்தப்பட்டார். சர்க்கார் படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் ரஜினிகாந்த் நடித்த தர்பார் என்ற படத்தை இயக்கினார் ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை. அதன்பிறகு முருகதாஸ் எந்த படத்தையும் இதுவரை இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News