புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அதிகாலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி.. அதிரவைக்கும் பின்னணி

Armstrong: தமிழகத்தை உலுக்கிய பெரிய சம்பவம் சமீபத்தில் நடந்த ஆர்ம்ஸ்டராங் கொலைதான். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவருடைய ஏரியாவில் அவரை சுற்றி பல பேர் இருந்த போதும் வெட்டி சாயக்கப்பட்டார்.

இது அவரை மிரட்டுவதற்காக நடந்த திட்டம் கிடையாது, ஒரே வெட்டு அவர் மீது பட்டதும் உயிர் போக வேண்டும் என பல நாள் பிளான் பண்ணி நடந்த கொலை. ஆரம்பத்தில் 2023 ஆம் ஆண்டு இறந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு நடந்த பழிக்கு பழி சம்பவம் என சொல்லப்பட்டது.

இதற்காக 11 பேர் கொலை குற்றவாளிகளாக சரண்டர் அடைந்தார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த கொலை அரசியல் நோக்கத்துக்காக நடைபெற்று இருக்கிறது. ஆருத்ரா மற்றும் பாஜக கட்சி மீது சந்தேகம் இருப்பதாக சொல்லி இருந்தார்.

அதிரவைக்கும் பின்னணி

முதலமைச்சர் ஸ்டாலினும் அதை உறுதிப்படுத்தும் படி பேசி இருந்தார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்த 11 பேரில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று மாதவரத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய உபயோகப்படுத்திய ஆயுதங்களை மாதவரம் ஏரிக்கரையில் புதைத்து வைத்திருப்பதாக திருவேங்கடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதை எடுக்க இன்று அவரை மாதவரம் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அந்த மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை பயன்படுத்தி காவலர்களை தாக்க திருவேங்கடம் முயற்சி செய்திருக்கிறார். எனவே தங்களை காப்பாற்றிக் கொள்ள திருவேங்கடத்தை சுட்டு வீழ்த்தியதாக காவல்துறையினர் தங்கள் தரப்பு வாக்குமூலத்தை சொல்லி இருக்கிறார்கள்.

இந்த என்கவுண்டர் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் நடைபெற்று இருக்கிறது. தற்போது திருவேங்கடத்தின் உடல் தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவி ஏற்ற ஒரு சில தினங்களில் இந்த என்கவுண்டர் நடைபெற்றிருக்கிறது.

இந்த என்கவுண்டர் பற்றி எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களிடம் ஒரு சில கேள்விகளை கேட்டு இருக்கிறார். சரணடைந்த குற்றவாளியை என்கவுண்டர் செய்தது ஏன், ? அவ்வளவு அவசரமாக அதிகாலையில் திருவேங்கடத்தை மாதவரத்திற்கு அழைத்து சென்றது ஏன், அவர் கையில் விலங்கு போடாமல் அழைத்து சென்றது ஏன் என அடுத்தடுத்த கேள்விகளை வைத்திருக்கிறார்.

இனி இது தொடர்பாக நிறைய சந்தேக கேள்விகளும், அதற்கான பதில்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆம்ஸ்டராங் கொலை செய்யப்பட்டு விட்டார், அவரை கொன்ற கொலைக் குற்றவாளிகளில் ஒருவர் என்கவுண்டரில் இறந்துவிட்டார். இத்தோடு இந்த கேஸ் முடிந்து விடாமல் இதன் உண்மையான காரணத்தை காவல்துறையினர் கண்டு பிடித்தால் தான் இந்த கொடூர கொலைக்கு நீதி கிடைக்கும்.

Trending News